Last Updated : 07 Dec, 2021 06:09 PM

 

Published : 07 Dec 2021 06:09 PM
Last Updated : 07 Dec 2021 06:09 PM

சுண்ணாம்பாற்றில் மீண்டும் தொடங்கிய படகு சவாரி: கடலில் குளிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

புதுச்சேரி சுண்ணாம்பாற்றில் படகு சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. பாரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் செல்லப்படாமல் ஆற்றிலேயே சுற்றிக் காண்பிக்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் தமிழகப் பகுதியில் உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாகப் படகு சவாரி நிறுத்தப்பட்டு, படகுகள் கரைமேல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. இருப்பினும் ஒருசில படகுகள் ஆற்றில் மூழ்கியதால் இன்ஜின் பழுதானது. பாரடைஸ் பீச்சில் பயணிகளை இறக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஜெட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து, வெயில் அடித்து வருகிறது. ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் 25 நாட்களுக்குப் பிறகு கடந்த 3-ம் தேதி முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கியது. இருப்பினும் குறைந்த அளவிலான படகுகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக 20 பேர் செல்லக்கூடிய 4 படகுகள், 25 பேர் வரை செல்லக்கூடிய ஒரு படகு, 30 பேர் வரை செல்லக்கூடிய ஒரு படகு ஆகியவை மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆற்றில் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஸ்பீடு போட் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டிருந்த ஜெட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக ஆற்றிலேயே சுற்றிக் காண்பிக்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர். கடலில் குளிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் செல்லாததால் படகு குழாமுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் 50 சதவீதம் பேர் படகு சவாரி செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாரடைஸ் பீச்சில் புதிதாக ஜெட்டி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர்தான் சுற்றுலாப் பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர். அதே நேரத்தில் பாரடைஸ் பீச்சுக்குப் படகுகள் இயக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x