Published : 07 Dec 2021 04:28 PM
Last Updated : 07 Dec 2021 04:28 PM
திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில்களில் ரூ.5.58 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் ஆன்மிக வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து மத்திய அரசின் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்) கீழ் திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோயில் மற்றும் வில்லியனூரில் அமைந்துள்ள கோகிலாம்பாள் திருக்காமீஸ்வரர் கோயில்களில் கடந்த 2018-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
இவ்விரு கோயில்களிலும் ஒருசில பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று காரணமாகக் கோயில்கள் மூடப்பட்டதால் திருப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் ரூ.5.58 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு, இதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன.
திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மண்டபத்தில் கதவுகள், ஜன்னல்கள், தண்ணீர் இணைப்பு வசதிப் பணிகள், பக்தர்கள் ஆற்றில் இறங்கி நீராட வசதியாக படித்துறை மற்றும் நடைபாதைப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் படித்துறையின் இறங்கு தளம், படிக்கட்டுகளில் கருங்கல் தரைப்பதிப்பு, தற்காப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இங்கு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க ஏதுவாக ஆற்றங்கரையோரம் சிமெண்டால் ஆன சிறு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற உள்ளன.
மேலும் கோயில் சுற்றுப்புற நிலத்தில் கம்பி வேலி அமைத்தல், பூந்தோட்டம், ஆடை மாற்றும் அறை வசதி, குடிநீர் வசதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோல் வில்லியனூர் கோகிலாம்பாள் திருக்காமீஸ்வரர் கோயிலில் சுற்றுலா வசதி மையம் கட்டப்படுகிறது.
இவற்றின் தூண்களில் அலங்கார வேலைகள், கூரை நிலை சுதை வேலைகள், வண்ணம் பூசிவது போன்ற பணிகளும், நடனக் கூடத்தில் தரை, பூசு வேலை, வர்ணம் பூசுவது போன்ற பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்கள், பெண்களுக்கு என்று தனிக் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
இங்குள்ள புனிதக் குளத்தில் கருங்கல்லால் ஆன படித்துறை தரை வேலைகள், துருப்பிடிக்காத சில்வர் கைப்பிடி வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோயிலைச் சுற்றிலும் 50 மீட்டர் கணம் கொண்ட கருங்கல் தரை பதிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு கோயில்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் திருப்பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் விரைந்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ''திருக்காஞ்சி, திருக்காமீஸ்வரர் கோயில்களில் ரூ.10 கோடிக்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் ரூ.3 கோடி அளவுக்குப் பணிகள் முடிக்கப்பட்டன. இடையில் கரோனா பெருந்தொற்று பரவியதால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து விடுபட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 50 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் எஞ்சிய பணிகள் முடிக்கப்படும்.
திருக்காஞ்சியில் சங்கராபரணி ஆற்றங்கரையில் 2023-ம் ஆண்டில் புஷ்கரணி விழா நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. புஷ்கரணி நடப்பதால் சங்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் 80 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக சிவபெருமான் சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் இந்தக் கோயில் பணிகள் முடிக்கப்பட்டு விடும்'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT