Published : 07 Dec 2021 01:41 PM
Last Updated : 07 Dec 2021 01:41 PM
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவாக 3.6 மி.மீட்டர் பதிவாகியுள்ளதாகவும் இதில் 2 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிலை அறிக்கையில், வடகிழக்குப் பருவமழையில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவின் மாவட்ட வாரியான அளவீடுகளும் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட விவரங்களும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்கள், நிவாரண முகாம்கள் நடத்தப்பட்ட விவரத்தையும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகைமை சார்பில் புள்ளிவிவரங்களோடு அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளதாவது:
1. மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில், 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.6 மி.மீ. ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் (274.6 மி.மீ.) அதிகனமழையும், தென்காசி மாவட்டம், ஆயிகுடி (101.0 மி.மீ.) மற்றும் தேனி மாவட்டம், பெரியாறு (81.0 மி.மீ.) ஆகிய இரண்டு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 41.06 மி.மீட்டரும், தருமபுரி மாவட்டத்தில் 19.74 மி.மீட்டரும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 13.68 மி.மீட்டரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 9.25 மி.மீட்டரும், தேனி மாவட்டத்தில் 9.15 மி.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 6.74 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6.29 மி.மீட்டரும், நாமக்கல் மாவட்டத்தில் 6.09 மி.மீட்டரும், வேலூர் மாவட்டத்தில் 5.37 மி.மீட்டரும், கரூர் மாவட்டத்தில் 4.42 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை 01.10.2021 முதல் 07.12.2021 வரை 683.4 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 385.9 மி.மீட்டரை விட 77 சதவீதம் கூடுதல் ஆகும்.
2. முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்ற விவரம்:
3. நிவாரண முகாம்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 257 நபர்கள் 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 1,330 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களில், 2156 நபர்கள் 36 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
◦ செங்கல்பட்டு மாவட்டத்தில், 104 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
◦ கன்னியாகுமரி மாவட்டத்தில், 8 நபர்கள் 1 நிவாரண முகாம்களிலும்,
◦ ராமநாதபுரம் மாவட்டத்தில், 729 நபர்கள் 5 நிவாரண முகாமிலும்,
◦ ராணிப்பேட்டை மாவட்டத்தில், 63 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
◦ தூத்துக்குடி மாவட்டத்தில், 25 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
◦ திருவள்ளூர் மாவட்டத்தில், 42 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
◦ திருவண்ணாமலை மாவட்டத்தில், 166 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,
◦ வேலூர் மாவட்டத்தில், 1,019 நபர்கள் 17 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2,989 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டிஎம்சி,-ல், 6.12.2021 நிலவரப்படி, 212.009 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இது 94.52 சதவீதம் ஆகும்.
4. பெருநகர சென்னை மாநகராட்சி
◦ மழை நீர் தேங்கியுள்ள 6 பகுதிகளில், அதிக திறன் கொண்ட 26 பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.
◦ இதுவரை 19,740 மருத்துவ முகாம்கள் மூலம் 6,48,689 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
◦ மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், 918 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
5. சேத விவரம்
◦ கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
◦ 47 கால்நடைகள் இறந்துள்ளன.
◦ 633 குடிசைகள் பகுதியாகவும், 55 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், 15 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன.
◦ இதுவரை (07.12.2021) 1,27,811 ஹெக்டர் வேளாண்மை பயிர்களும் 16,447 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்தன.
6. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
• தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக, போடிநாயக்கனூர் வட்டம், போடிமெட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
• திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை பகுதியில், 6.12.2.2021 அன்று காலை 6.00 மணி வரை 7.2 மி.மீ. மழை பதிவான நிலையில், காலை 6 மணி முதல் 9.00 மணி வரை 274.6 மி.மீ. மழை அதிகனமழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பையர்குளம் கரை உடைந்து அருகில் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது அப்பையர்குளத்தின் கரை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், மணப்பாறையில் இருந்து வரும் வெள்ள நீர் கோரையாறு மூலம் காவிரி ஆற்றில் கலக்கும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
• ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், வேகா மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் கிராமத்தின் அருகில் செல்லும் பாலாற்றில் 6.12.2021 அன்று, தவறி விழுந்ததைத் தொடர்ந்து, மேற்படி நபரைக் காப்பாற்றச் சென்ற இருவரும் கரை சேர
முடியாமல் ஆற்றில் சிக்கியதால் அவர்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
7. பொது
◦ பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 13,450 புகார்கள் வரப்பெற்று, 12,042 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
◦ மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்.1070) வரப்பெற்ற 7227 புகார்களுள், 6937 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்.1077) வரப்பெற்ற 7040 புகார்களுள், 6958 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
◦ சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி
தொடர்பான புகார்களுக்குப் பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு தமிழக அரசின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT