Published : 07 Dec 2021 10:08 AM
Last Updated : 07 Dec 2021 10:08 AM
பள்ளிகளில் தனி மனித இடைவெளியுடன் இறை வணக்கம் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே சமயம் பள்ளிகளில் நடைபெறும் இறை வணக்கக் கூட்டம், கூட்ட நெரிசல் காரணத்தால் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்காக வகுப்பறையில் தனி மனித இடைவெளியில் இறை வணக்கம் நடைபெற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
காரணம் சில நிமிடங்கள் இறை வணக்கம் பாடி படிக்கத் தொடங்குவது மன அமைதியோடு, படிப்பில் ஆர்வத்தை அதிகப்படுத்தும். குறிப்பாக மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் இறை வணக்கத்தில் பங்கேற்பது பாதுகாப்பாக இருப்பதோடு நல்லொழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் வழிவகுக்கும். இதனையே ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக அரசு மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிப்பது மட்டும் போதாது. அதை முழுமையாகக் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டும். இறை வணக்க நடைமுறையில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் நடைபெறும் இறை வணக்க நடைமுறைக்குத் தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல.
வைரஸ் தடுப்புக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், பள்ளிகளில் ஒழுக்கம், பண்பாடு ஆகியவை சம்பந்தப்பட்ட நடைமுறையில் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து இறை வணக்கம் தொடர அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.
இறை வணக்கத்திற்காக மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதும், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி, நீதிநெறிக் கதைகள் சொல்வது வழக்கமானது மட்டுமல்ல மாணவர்கள் நலன் காக்கும்.
எனவே தமிழக அரசு, கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு அதிக அக்கறையோடு செயல்பட வேண்டும் மற்றும் பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் இறை வணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும்."
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT