Last Updated : 31 Mar, 2016 09:18 AM

 

Published : 31 Mar 2016 09:18 AM
Last Updated : 31 Mar 2016 09:18 AM

விஜயகாந்தை யாரோ இயக்குகிறார்கள்: திமுகவில் சேர்ந்த யுவராஜ் குற்றச்சாட்டு

விஜயகாந்தை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று திமுகவில் இணைந்த தேமுதிக முன் னாள் மாவட்டச் செயலாளர் வி.யுவ ராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

விஜயகாந்துக்கு நெஞ்சை பிளந்து காட்டாத அளவுக்கு விசுவாசமாக இருந்ததாக கூறும் நீங்கள், தேமுதி கவில் இருந்து விலகியது ஏன்?

அதிமுகவை வீழ்த்துவேன் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக விஜயகாந்த் முழங்கி வந்தார். எனவே, திமுகவுடன் கூட்டணி வைப் பார் என்று நினைத்தோம். ஆனால், திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துள்ளார். இதன்மூலம் ஜெய லலிதாவுக்கு அவர் உதவி செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே, அந்தக் கட்சியில் இருந்து விலகினேன்.

கடந்தமுறை அதிமுக, இந்த முறை திமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்தால் கட்சியின் பெயர் கெட்டு விடும் என்று நினைத்து இந்த முடிவை விஜயகாந்த் எடுத்திருக்கலாமே?

திமுக ஊழல் கட்சி என்று தேமுதி கவினர் இப்போது விமர்சிக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிமுகவுடன் கடந்தமுறை கூட்டணி வைத்தார்களே ஏன்? அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, அக் கட்சியின் நடவடிக்கை சரியில்லை என்றதும் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. அதேபோல், திமுகவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றால் இப்போதும் வெளியேறி இருக்கலாம்.

மாவட்டச் செயலாளராக இருந்த நீங்கள், உங்கள் ஆதரவாளர்களுடன் வராமல் தனியாக வந்து திமுகவில் சேர்ந் துள்ளீர்களே?

நான் திமுகவில் சேரப் போகி றேன் என்பது எனக்கு நெருக்கமானவர் களுக்குகூட தெரியாது. திமுகவுக்கு செல்லும்போது, ஆயிரம் பேரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. நான் விலகியதற்கான காரணத்தை தெளிவாக சொல்லிவிட்டேன். இனி தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

ரசிகர் மன்றத்தில் இருந்து வராத நீங்கள், எதிர்பார்த்தது கிடைக்காததால் திமுகவுக்கு சென்றுவிட்டீர்கள் என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்களே?

நான் ரசிகர் மன்றத்தில் இருந்து வரவில்லை என்பதை ஒப்புக்கொள் கிறேன். ரசிகர் மன்றத்துக்கு முன்பே விஜயகாந்துடன் இருந்த சுந்தரராஜன் ஏன் அவரை விட்டு விலகினார். ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த தமிழழகன், சுரேஷ்குமார் போன்றவர்கள் ஏன் விஜயகாந்தை விட்டு விலகினர். 2006-ல் கட்சியில் சேர்ந்த நான், 2009, 2014 என இரு தேர்தல்களில் போட்டியிட்டேன். எனது, சொந்த செலவில்தான் தேர்தலை சந்தித்தேன். நான் எதையும் எதிர்பார்த்து திமுகவுக்கு வரவில்லை. எம்எல்ஏ சீட், கட்சிப் பதவி என அவர்கள் எதைத் தந்தாலும் ஏற்க மாட்டேன்.

விஜயகாந்துக்கு நெருக்கமானவராக இருந்த நீங்கள், அவரது செயல்பாடு களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விஜயகாந்த் ரொம்ப நல்லவர். உதவி செய்யும் குணம் கொண்டவர் என்பதால்தான் தேமுதிகவில் சேர்ந் தேன். ஆனால், எதை நினைத்து சென்றேனோ அந்த விஷயங்கள் எல்லாமே வேறு மாதிரி இருக்கிறது. விஜயகாந்தை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். அந்த பின்னணி மர்மம் என்ன என்று புரியவில்லை. அந்த மர்ம முடிச்சில் பல லட்சம் தொண்டர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x