Published : 06 Dec 2021 06:24 PM
Last Updated : 06 Dec 2021 06:24 PM
உரிய காரணம் இல்லாமல் தேர்தல்களை ஒத்திவைப்பது வாக்களித்த மக்களை ஜோக்கராக்கும் செயலாகும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி அதிமுக உறுப்பினர்கள் கண்ணதாசன், திருவிகா, அலமேலு உட்பட 8 பேர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் அக். 22-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று மதியம் 2.30-க்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 12 பேரும் மாவட்ட ஊராட்சி அலுவலகம் வந்தோம். அதிமுக உறுப்பினர்கள் 8 பேரும் திருவிகாவை ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்து வேட்புமனு தாக்கல் செய்தோம்.
இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் 4 பேர் துணைத் தலைவர் தேர்தல் நடத்தக்கூடாது என்று கூறி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்திவைத்தார். எனவே, கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்தவும், வாக்குப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தேர்தலை நீதிமன்றமே நடத்தும், டிச. 17 மதியம் நீதிமன்றத்தில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றனர்.
அதற்கு மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர், துணைத் தலைவர் தேர்தலை 3 முறை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், "இயற்கை சீற்றம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கலாம். உரிய காரணம் இல்லாமல் தேர்தலை ஒத்திவைப்பது வாக்களித்த மக்களை ஜோக்கராக்கும் செயலாகும். இதை ஏற்க முடியாது. கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தேர்தலை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT