Published : 06 Dec 2021 06:37 PM
Last Updated : 06 Dec 2021 06:37 PM

திமுக அரசைக் கண்டித்து டிச. 9-ல் அதிமுக மாநிலம் தழுவிய போராட்டம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ பல்வேறு பணிகளை செய்யத்‌ தவறி வரும்‌ திமுக அரசைக்‌ கண்டித்தும்‌; மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ துயரங்களுக்குத்‌ தீர்வு காண வலியுறுத்தியும்‌,அதிமுக சார்பில்‌, வரும் 9 ஆம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்த இருப்பதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,”தமிழ்‌ நாட்டில்‌ திமுக ஆட்சிப்‌ பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல்‌ ஆகிவிட்ட போதிலும்‌, தேர்தல்‌ நேரத்தில்‌ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின்‌ அன்றாடத்‌ தேவைகளையும்‌, அவர்கள்‌ சந்திக்கும்‌ ஏராளமான பிரச்சனைகளுக்குத்‌ தீர்வு காண்பதிலோ மு.க.ஸ்டாலின்‌ தலைமையிலான அரசு சிறிதும்‌ அக்கறை கொள்ளாமல்‌ வாய்ச்‌ சவடால்‌ ஆட்சி நடத்திக்‌ கொண்டிருப்பதை அதிமுக வன்மையாகக்‌ கண்டிக்கிறது; இந்த அலட்சியப்‌ போக்கினை எதிர்த்துப்‌ போராட அதிமுகவின் முழு ஆற்றலையும்‌ பயன்படுத்துவோம்‌ என்று எச்சரிக்கிறது.

பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள்‌ குறைத்தால்‌, அவற்றின்‌ விலை குறைந்து மக்களுக்குப்‌ பயன்‌ கிடைக்கும்‌ என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. அண்மையில்‌ மத்திய அரசு தனது உற்பத்தி வரியை (கலால்‌ வரி) குறைத்ததன்‌ விளைவாக, நாடு முழுவதும்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலைகள்‌ ஓரளவுக்குக்‌ குறைந்தன. மத்திய அரசின்‌ வரிக்‌ குறைப்பைத்‌ தொடர்ந்து 25-க்கும்‌ மேற்பட்ட மாநிலங்களும்‌, மத்திய அரசின்‌ கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட யூனியன்‌ பிரதேசங்களும்‌, தங்கள்‌ அதிகார வரம்புக்குள்‌ வரும்‌ “வாட்‌” எனப்படும்‌ மதிப்புக்‌ கூட்டல்‌ வரியைக்‌ குறைத்தன. இதன்‌ காரணமாக, அங்கெல்லாம்‌ பெட்ரோலும்‌, டீசலும்‌ லிட்டருக்கு 15 ரூபாய்‌ முதல்‌ 20 ரூபாய்‌ வரை கூட, விலை குறைந்திருக்கிறது.

தாங்கள்‌ ஆட்சிக்கு வந்தால்‌ பெட்ரோல்‌ விலையை லிட்டருக்கு 5 ரூபாயும்‌, டீசல்‌ விலையை லிட்டருக்கு 4 ரூபாயும்‌ குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக-வோ, பெட்ரோல்‌ விலையை மட்டும்‌ 3 ரூபாய்‌ அளவுக்குக்‌ குறைத்துவிட்டு கள்ள மெளனம்‌ காக்கிறது. மற்ற மாநிலங்களும்‌, மத்திய அரசும்‌ செய்திருப்பதைப்‌ போல வரிக்‌ குறைப்பை செய்து, கொடுத்த வாக்குறுதியைக்‌ காப்பாற்றி, பண வீக்கத்தைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ பிற மாநிலங்களில்‌ உள்ளதைப்‌ போல, பெட்ரோல்‌, டீசல்‌ விலைகளைக்‌ குறைக்க வேண்டும்‌ என்று அதிமுக வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்‌, மக்களுக்கு மேலும்‌, மேலும்‌ சுமைகளை ஏற்றும்‌ திமுக அரசின்‌ செயல்களை அதிமுக வன்மையாகக்‌ கண்டிக்கிறது.

தமிழ்‌நாடு முழுவதும்‌ லட்சக்கணக்கான மக்கள்‌ அண்மையில்‌ பெய்த பெருமழையால்‌ தங்கள்‌ வீடு, வாசல்களை இழந்துள்ளனர்‌. அன்றாடம்‌ வேலைக்குப்‌ போய்‌ தினக்‌ கூலி ஈட்டி வாழ்வை நடத்தும்‌ மக்கள்‌ வருமானம்‌ இன்றி தவிக்கின்றனர்‌. அரசின்‌ சார்பில்‌ அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த ஒரு நிவாரணமும்‌ வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒருசில இடங்களில்‌, ஒருசில குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சிற்சில உதவிப்‌ பொருட்களைத்‌ தவிர, ஓர்‌ அரசு தனது பொறுப்பை உணர்ந்து அளிக்க வேண்டிய உறுதியான மறுவாழ்வு உதவிகள்‌ இன்னும்‌ வழங்கப்படாததை அனைத்திந்திய அதிமுக கண்டிக்கிறது.

முன்னாள் முதல்வர் ‌ ஜெயலலிதா ஆட்சிக்‌ காலங்களில்‌, சுனாமி, மழை, வெள்ளம்‌ போன்றவற்றால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன உதவிகள்‌, எத்தனை விரைவில்‌ உலகம்‌ போற்றும்‌ வகையில்‌ அளிக்கப்பட்டன என்பதை சுட்டிக்‌ காட்டுவது அவசியமாகிறது. மாநில அரசு எவ்வளவு நிதி நெருக்கடியில்‌ இருந்தாலும்‌, மக்களுக்கு உதவுவது என்று வந்துவிட்டால்‌ அதற்கு எந்தத்‌ தடையும்‌, நெருக்கடியும்‌ குறுக்கே நிற்கக்‌ கூடாது என்ற நிர்வாக ரீதியான கொள்கை முடிவுகளை எடுத்து செயல்பட்ட மகத்தான மனிதாபிமானம்‌ கொண்டவராக ஜெயலலிதா ஆட்சி செய்தார்‌. அதனைத் தொடர்ந்து வந்த அதிமுக அரசும் அதே கொள்கையோடு செயல்பட்டது. ஆனால்‌, இப்பொழுது எதற்கெடுத்தாலும்‌ பொருளாதார வியாக்கியானங்களை உதிர்க்கும்‌ கல்நெஞ்சக்கார திமுக அரசு தமிழ்‌ நாட்டு மக்களை வாட்டி, வதைத்துக்‌ கொண்டிருக்கிறது.

மழை, வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டிருக்கும்‌ விவசாயப்‌ பெருங்குடி மக்களின்‌ நிலை மிகவும்‌ வேதனைக்குரியதாக இருக்கிறது. உரிய நேரத்தில்‌, சரியான பயிர்‌ இழப்பீடுகளையும்‌, மறுசாகுபடிக்குத்‌ தேவையான உதவிகளையும்‌ அவர்களுக்கு வழங்காவிட்டால்‌ அது, மாநிலத்தின்‌ மொத்த பொருளாதாரத்தையும்‌, நிலமற்ற கிராமப்புற மக்களின்‌ அடிப்படைத்‌ தேவைகளையும்‌ மிக ஆழமாக பாதித்துவிடும்‌ என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறோம்‌.

எனவே, நெற்பயிர்‌ ஹெக்டேர்‌ ஒன்றுக்கு 40,000/- ரூபாய்‌ என நிவாரணம்‌ உயர்த்தி வழங்கப்பட வேண்டும்‌; மறு சாகுபடிக்கென ஹெக்டேர்‌ ஒன்றுக்கு 12,000/- ரூபாய்‌ அளிக்கப்பட வேண்டும்‌; கரும்பு, பருத்தி, கிழங்கு வகைகள்‌, தோட்டப்‌ பயிர்கள்‌, வாழை என்று மற்றவகை விளைச்சலை இழந்தோருக்கு முழுமையான நிவாரணம்‌ அளிக்க வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்துகிறோம்‌.

பொங்கல்‌ விழாவைக்‌ கொண்டாட மக்கள்‌ அனைவருக்கும்‌ ரொக்கமாக உதவித்‌ தொகை தருவது, இன்று நிலவும்‌ கரோனா சூழலில்‌ மிகவும்‌ இன்றியமையாதது. மழை, வெள்ள பாதிப்புகளையும்‌, கொரோனாவால்‌ ஏற்பட்டிருக்கும்‌ வேலை இழப்புகளையும்‌, உற்பத்தி வீழ்ச்சியையும்‌, விலைவாசி உயர்வையும்‌ கருத்தில்கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும்‌ தலா 5,000/- ரூபாய்‌ பொங்கல்‌ பரிசாக அளிக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌. இது, தமிழ்‌ மக்களுக்கு தமிழர்‌ திருநாளில்‌, தமிழ்‌ நாடு அரசு செய்திட வேண்டிய மிக அவசியமான கடமை என்பதை சுட்டிக்‌ காட்டுகிறோம்‌.

அதிமுக ஆட்சிக்‌ காலங்களின்‌ போது மக்களுக்கென உருவாக்கப்பட்ட முன்னோடித்‌ திட்டங்கள்‌ பலவற்றை இந்திய நாட்டின்‌
பல்வேறு மாநிலங்கள்‌, தாமும்‌ செயல்படுத்த ஆர்வம்‌ காட்டிவரும்‌ சூழ்நிலையில்‌, அந்தத்‌ திட்டங்களை எல்லாம்‌ காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்‌, கழகத்தின்‌ புகழ்‌ மீது கொண்ட பொறாமையாலும்‌ முடக்கிப்போட திமுக அரசு முயற்சிக்கிறது.

அம்மா மினி கிளினிக்‌ திட்டம்‌ தமிழ்‌ நாட்டு மக்களுக்குப்‌ பெரிதும்‌ பயன்‌ அளிக்க மருத்துவ கட்டமைப்பின்‌ அடித்தளமான திட்டம்‌. பல்வேறு வளர்ச்சி நிறுவனங்களால்‌ பாராட்டப்பட்ட இந்தத்‌ திட்டத்தில்‌ நூற்றுக்கணக்கான இளைய தலைமுறையினர்‌ அர்ப்பணிப்புடன்‌ பணியாற்றிக்‌ கொண்டிருக்கின்றனர்‌. கொரோனா பெருந்தொற்றின்‌ தாக்கம்‌ உச்சத்தில்‌ இருந்த நேரத்தில்‌ அம்மா மினி கிளினிக்குகளையும்‌, அதில்‌ பணியாற்றிய அனைத்துப்‌ பணியாளர்களையும்‌ முழுமையாக தமிழ்‌ நாடு அரசு பயன்படுத்திக்‌ கொண்டது. ஆனால்‌, இப்பொழுது அவர்களை பணி நீக்கம்‌ செய்யவும்‌, அம்மா மினி கிளினிக்குகளை மூடவும்‌ அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இது மிகவும்‌ தவறான, மனிதாபிமானமற்ற மக்களை அலட்சியப்படுத்துகின்ற, முன்‌ யோசனையற்ற முடிவு என்று கண்டிக்கிறோம்‌.

அம்மா மினி கிளினிக்குகளின்‌ சேவை மக்களுக்குத்‌ தேவை. அங்கு பணியாற்றும்‌ நூற்றுக்கணக்கானோரின்‌ உழைப்பை உதாசீனப்படுத்தக்கூடாது. அவர்களது தியாகத்தை அலட்சியப்படுத்துவது அறமற்ற செயல்‌. அவர்களுக்கு உரிய பணிப்‌ பாதுகாப்பு வழங்க வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

திமுக ஆட்சிக்கு வந்த நாள்‌ முதல்‌, சிமெண்ட்‌ போன்ற கட்டுமானப்‌ பொருட்களின்‌ விலைகளும்‌, மக்களின்‌ அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத காய்‌, கனிகள்‌, மளிகைப்‌ பொருட்கள்‌ போன்றவற்றின்‌ விலைகளும்‌, நினைத்துப்‌ பார்க்க முடியாத அளவுக்கு உயாந்து கொண்டே செல்கின்றன.

அதிமுக ஆட்சி நடைபெற்ற நேரங்களில்‌, கட்டுமானப்‌ பொருட்களின்‌ விலைகளை கட்டுக்குள்‌ வைக்க நிர்வாக ரீதியாக சீர்திருத்தங்களிலும்‌, புதிய நடைமுறைகளிலும்‌ கவனம்‌ செலுத்தப்பட்டு மக்களின்‌ துயர்‌ துடைக்கப்பட்டது.

பண்ணை பசுமைத்‌ திட்டத்தின்‌ / மூலம்‌ நடமாடும்‌ வாகனங்கள்‌ வழியாக குறைந்த விலையில்‌ சமையலுக்குத்‌ தேவையான அனைத்துப்‌ பொருட்களும்‌, காய்‌, கனிகளும்‌ மக்களுக்குக்‌ கிடைக்க வழி காணப்பட்டது. ஆனால்‌, இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. திமுக அரசின்‌ அலட்சியத்தால்‌ அனைத்துப்‌ பொருட்களின்‌ விலைகளும்‌ உயர்ந்து, மக்களின்‌ அன்றாட வாழ்வு பெரும்‌ இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை திமுக அரசு உடயடியாக சீர்‌ செய்திட வேண்டும்‌.

கனமழை, பெருவெள்ளம்‌, புயல்‌ போன்ற பேரிடா காலமானாலும்‌ சரி; கரோனா கொடுந்தொற்று நோய்‌ உச்சக்கட்டத்தில்‌ இருந்தபோது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலமானாலும்‌ சரி; வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்காக களப்பணி ஆற்றுவதிலும்‌ சரி, புறந்தூய்மை காக்கப்பட வேண்டும்‌, பேணப்பட வேண்டும்‌ என்பதை மட்டும்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு தங்கள்‌ உயிரை துச்சமென மதித்து, அல்லும்‌ பகலும்‌ அயராது ஓய்வின்றி உழைத்துக்‌ கொண்டிருக்கும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ உட்பட அனைவருக்கும்‌ 5,000/- ரூபாய்‌ ஊக்கத்‌ தொகை வழங்கிட திமுக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ பல்வேறு பணிகளை செய்யத்‌ தவறி வரும்‌ திமுக அரசைக்‌கண்டித்தும்‌; மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ துயரங்களுக்குத்‌ தீர்வுகாண வலியுறுத்தியும்‌,அதிமுக சார்பில்‌, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ அனைத்து மாவட்டத்‌ தலைநகரங்களிலும்‌, வருகின்ற 9,.12.2021 - வியாழக்‌ கிழமை காலை 10.30 மணியளவில்‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டங்கள்‌ நடைபெறும்‌.

மக்களின்‌ சுமை அறியாது மெத்தனமாக செயல்படும்‌ திமுக அரசைக்‌ கண்டித்து நடத்தப்படும்‌ இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டங்களில்‌, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச்‌ சோந்த கட்சி நிர்வாகிகளும்‌, முன்னாள்‌ அமைச்சர்களும்‌, அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌, கட்சியின் பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌, உள்ளாட்சி அமைப்புகள்‌ மற்றும்‌ கூட்டுறவு சங்கங்களின்‌ பிரதிநிதிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌, பொதுமக்களும்‌, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, பெருந்திளான அளவில்‌ கலந்துகொள்ளுமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளார் ஓபிஎஸ், ஈபிஎஸ் தேர்வான நிலையில் வெளியாகும் முதல் கூட்டறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x