Published : 06 Dec 2021 05:25 PM
Last Updated : 06 Dec 2021 05:25 PM
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத் தகவல் பலகை வைக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு மருத்துவமனையில் இருக்கும் நாட்களுக்கும் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மாறுபடுகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக் கட்டணம் தொடர்பாகத் தகவல் பலகை வைக்க வேண்டும். இந்த விதிமுறை எந்த தனியார் மருத்துவமனையிலும் பின்பற்றப்படுவதில்லை. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் தொடர்பாகத் தகவல் பலகை வைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், ''மருத்துவக் கட்டணம் என்பது ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் அதற்கான சிகிச்சைகளைப் பொறுத்து வேறுபடும். மனுதாரர் எந்தவொரு நிகழ்வையும் குறிப்பிடாமல், பொதுவான கோரிக்கையுடன் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT