Published : 06 Dec 2021 05:22 PM
Last Updated : 06 Dec 2021 05:22 PM
குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் முத்தடுப்பு மருந்து (டிபிடி) விநியோகம் 2023-ம் ஆண்டு முதல் தொடங்கும் என ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில், 1907-ல் நிறுவப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில், வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கப்பட்டது. தற்போது, 'ரேபிஸ்' நோய் கண்டறியும் மையமாகச் செயல்படுவதுடன், மருத்துவமும் அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்ற, ரூ.137 கோடி செலவில் உலகத்தர கட்டுமானம், உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.
இப்பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறைவு பெற்று, ஜூலை மாதம் முதல் சோதனைப் பணிகள் தொடங்கப்பட்டன. வரும் 2023-ம் ஆண்டு முதல் முத்தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கும் என குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ”கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தி தொடங்கி சோதனை நடந்து வருகிறது. இம்மருந்தின் மூலப்பொருட்களின் தரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னர் வணிகரீதியாக விநியோகிக்க உரிமம் வழங்கும். உரிமம் கிடைத்தவுடன் முத்தடுப்பூசி மருந்து விநியோகிக்கப்படும். ஆண்டுக்கு 10 மில்லியன் டோஸ் முத்தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படும். வரும் 2023-ம் ஆண்டு விநியோகம் தொடங்கும்.
இந்த நிறுவனத்தில் ரேபீஸ் வெறிநாய்க்கடி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தனியார் நிறுவனங்களில் இருந்துதான் ரேபீஸ் தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், கோவை பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கரில் புதிய ரேபீஸ் மருந்து உற்பத்தி நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. தற்போது நிலப் பரிமாற்றத்துக்கான நடவடிக்கை நடந்து வருகிறது. நான்கு ஆண்டுகளில் ரேபீஸ் தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கும்.
இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசிகளை நிரப்புவது மற்றும் பேக்கிங் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி மருந்துகள் நிரப்பும் பணி தொடங்கும். மாதத்துக்கு ஒரு கோடி டோஸ்கள் நிரப்ப முடியும்” என்று குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சிவகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT