Last Updated : 06 Dec, 2021 05:18 PM

 

Published : 06 Dec 2021 05:18 PM
Last Updated : 06 Dec 2021 05:18 PM

கரோனா அரசாணைகள் ரத்து வழக்கு; முதியவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

மதுரை

கரோனா அரசாணைகளை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடர்ந்த முதியவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தவமணி (63). இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்களில், ''கரோனா உயிர்க்கொல்லி நோயல்ல. குணப்படுத்தக்கூடிய சாதாரண நோய்தான். சுலபமாக குணப்படுத்திவிடலாம். அதற்காகக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியதில்லை. எனவே, கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்தும், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு, ''மனுதாரர் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் விளம்பரம் தேடும் நோக்கத்தில் தேவையில்லாமல் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளை மனுதாரர் கண்டித்துள்ளார்.

மனுதாரரைப் போன்றவர்களின் செயல்பாடுகள் கரோனாவால் உயிரிழந்தவர்கள், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. மனுதாரரைப் போன்ற பிஸியானவர்களின் அறிவற்ற செயல்களைத் தண்டிக்காவிட்டால் கரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்றவர்களின் தொண்டுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனவே, மனுவைத் தள்ளுபடி செய்யப்படுவதுடன், மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் 15 நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டுக்கு வழங்க வேண்டும். தவறினால் மனுதாரரிடம் இருந்து பணத்தை வசூலிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் வருவாய் மீட்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x