Published : 06 Dec 2021 04:14 PM
Last Updated : 06 Dec 2021 04:14 PM
திருவண்ணாமலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகரம், அண்ணா சாலை – திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 666 மீட்டர் நீளம் மற்றும் 30 தூண்களைக் கொண்டு பாலம் அமைக்கப்படுகிறது. இரண்டரை ஆண்டுகள் கடந்தும், பணிகள் முழுமை பெறாததால், மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (6-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
"புதுச்சேரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய பணிகள் காலதாமதமாக நடைபெறுகின்றன. இதனிடையே, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்ததுடன், டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அண்ணா நுழைவு வாயில் அருகே மயானம் அமைந்துள்ள பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்திருந்தனர். ஏற்கெனவே, அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கிரிவலப் பாதையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
எனவே, திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே உள்ள டான்காப் ஆலை மற்றும் வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடத்தை ஒருங்கிணைந்து, புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டான்காப் ஆலையின் இடம், விவசாயத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்தத் துறையின் அமைச்சரைச் சந்தித்து, டான்காப் இடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. கோப்புகள் நகர்வு நடைபெற்று வருகிறது."
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT