Published : 06 Dec 2021 03:43 PM
Last Updated : 06 Dec 2021 03:43 PM

கனமழை பாதித்த இடங்களில் சீரமைப்புப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை

கனமழையால் பாதிக்கப்பட்ட மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (6.12.2021), தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதியான மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் நிவாரண நடவடிக்கைள் மற்றும் தேவைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதல்வர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், அரசு அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரும் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவதால் வெள்ள பாதிப்புகள் துரிதமாகச் சீர்செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், முதல்வர் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி இதுநாள்வரை தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அலுவர்களுக்கு உத்தரவிட்டு, அப்பணிகள் சரியான முறையில் நடைபெற்று வருகிறதா என்பதையும் தொடர் ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 20.11.2021 அன்று கனமழையால் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை, மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை இன்று காலை (6.12.2021) முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதி மக்கள், சீரமைப்புப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைத்து வருவதாகவும், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை முதல்வரே நேரடியாக ஆய்வு செய்வது தங்களுக்கு மனநிறைவைத் தருவதாகவும் தெரிவித்தனர். முதல்வர் இப்பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் ஊராட்சி, கொசஸ்தலை ஆற்றுப் பகுதியை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, கொசஸ்தலை ஆற்றிலிருந்து உபரி நீர் குடியிருப்புப் பகுதிகளில் புகாதவண்ணம் நடவடிக்கை எடுத்திட நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், துரை சந்திரசேகர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x