Published : 06 Dec 2021 02:35 PM
Last Updated : 06 Dec 2021 02:35 PM
காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"அண்மையில் பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைவானதால், காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது, இதைக் கட்டுப்படுதும் வகையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 09-11-2021 அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக காய்கறிகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இதன்படி கூட்டுறவுத் துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இது தவிர நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமும் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசின் இந்த நடவடிக்கையால் தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விலை வெளிச் சந்தையில் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் கூட்டுறவுத் துறை அமைச்சரால் 24-11-2021 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அறிவிப்பு வெளியிட்டு 10 நாட்கள் கூட முடியாத நிலையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் தற்போது வெளிச் சந்தையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாகவும், இதனால் ரேஷன் கடைகளில் தற்போதைக்கு காய்கறி விற்கப்படாது என்றும், அதே சமயம் பண்ணை பசுமைக் கடைகளில் தொடர்ந்து குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
அதாவது, நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவே இல்லை என்பதுதான் யதார்த்தம். இதற்குக் காரணம், சென்ற முறை வெங்காயம் நியாய விலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டபோது, விற்பனையாகாத வெங்காயத்திற்கான பணத்தை ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூலித்ததாகவும், எனவே விற்பனையாகாத காய்கறிகளுக்குப் பணம் வசூலிக்கப்படாது என்று உறுதி அளித்தால் காய்கறி விற்பனை செய்ய ஒத்துழைப்பு அளிப்போம் என ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
இதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து, ஊழியர்களுடன் கலந்து பேசி, ஒரு தீர்வினைக் கண்டு, நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்காமல், அந்தத் திட்டத்தையே கைவிடுவது என்பது ஏற்கக்கூடியது அல்ல. இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை.
24-11-2021 அன்றைய காய்கறிகளின் வெளிச் சந்தை விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனால், செய்திக்குறிப்பிலோ அரசின் நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
24-11-2021 அன்று வெளிச் சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு கிலோ தக்காளி தற்போது வெளிச் சந்தையில் 125 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் 150 ரூபாய்க்கும், 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 135 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 170 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சௌ சௌ 75 ரூபாய்க்கும், 121 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் 260 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோஸ் 80 ரூபாய்க்கும், 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சுரைக்காய் 105 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர, அவரைக்காய் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், புடலங்காய் 120 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் 105 ரூபாய்க்கும், பாகற்காய் 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருசில காய்கறிகளைத் தவிர அனைத்துக் காய்கறிகளின் விலையும் 100 ரூபாய்க்கு மேல் வெளிச் சந்தையில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் அரசுக்கு விளம்பரம் கிடைத்ததே தவிர மக்களுக்கு எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.
மக்கள் கண்ணீர் விடும் அளவுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலைகள் ஏறிக் கொண்டே செல்கின்றன. மளிகைப் பொருட்களை விடக் காய்கறிகளுக்கு மக்கள் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கரோனா உச்சத்தில் இருக்கும்போது கூட இந்த அளவுக்குக் காய்கறிகளின் விலை உயரவில்லை. அப்பொழுதெல்லாம் காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வராக வந்த பிறகு அதைவிடப் பன்மடங்கு காய்கறிகளின் விலை உயர்ந்துகொண்டே வருவதைப் பற்றி பேசாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் காய்கறிகளின் விலையையும் குறைந்தபட்சம் பாதியாகவாவது குறைக்கும் அளவுக்கு, அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT