Published : 06 Dec 2021 12:48 PM
Last Updated : 06 Dec 2021 12:48 PM
முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்குத் தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் இன்று வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தி:
"தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக முப்படை வீரர்கள் திகழ்கிறார்கள். முப்படை வீரர்களுடைய குன்றாத விசுவாசமும் கடமையில் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பும் இந்தியாவை வலிமையுள்ள தேசமாக மாற்றியுள்ளது.
வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கையின் சீற்றம் போன்றவற்றினை தீரமுடன் எதிர்கொண்டு தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் வீரர்கள் ஆற்றிய தியாகம் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அவர்களுடைய இளமைக் காலத்தையும், வாழ்க்கையின் சிறந்த காலத்தையும் நாட்டிற்காகவே அர்ப்பணித்து சேவையாற்றி ராணுவத்திலிருந்து விடைபெறும் போது நம்முடைய நன்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்க வேண்டியது அவசியமாகும்.
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் கொடி நாள் நிதிக்கு கணிசமாகப் பங்களிப்பதற்கு மக்களுக்குப் பொன்னான வாய்ப்பை அளிக்கும் வகையில், டிசம்பர் மாதம் 7-ம் நாள் முப்படை வீரர்களுக்கான கொடி நாளாகக் கொண்டாடப்பட்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்குத் தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறும் அவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். வெல்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்!"
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT