Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவேரிபட்டணம் ஆகியஇடங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பெண்களே வேலை பார்க்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நடைபெறவில்லை. தீப்பெட்டி சார்ந்த தொழில்களான மரக்குச்சி தயாரித்தல், பிரிண்டிங், ஸ்கோரிங் தொழில்கள் முடங்கி உள்ளன. மூலப்பொருட்கள் விற்பனை நிலையங்களில் விற்பனை சரிந்துள்ளது.
விவசாய வேலை
இதுகுறித்து நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, ‘‘தொடர் மழையால் தீப்பெட்டிகள், தீக்குச்சிகளை காய வைக்க முடியாததாலும், கூடுதல் ஊதியம் கிடைக்கும் என்பதால் பெண் தொழிலாளர்கள் விவசாய வேலைகளுக்கு சென்றுவிட்டதாலும், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தீப்பெட்டி தயாரிப்பில் மூலப்பொருட்களான அட்டை, குச்சி, மெழுகு, பேப்பர், குளோரேட் போன்றவற்றை அரசே கொள்முதல் செய்து சிட்கோ மூலம் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையில் வழங்க வேண்டும் ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT