Published : 09 Jun 2014 10:09 AM
Last Updated : 09 Jun 2014 10:09 AM

தனியார் கல்லூரி, பல்கலை.களுக்கு அரசு எவ்வித விதிகளையும் விதிக்கக் கூடாது: விஐடி ஜி.விஸ்வநாதன் பேட்டி

மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் நிர்ணயித்தலில் தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசு எந்தவித விதிமுறைகளையும் விதிக்காமல் தாராளமாக விட வேண்டும் என்றார் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

ஒரு நாடு வளர வேண்டு மானால், அந்த நாட்டில் உயர்கல்வியின் தரம் வளர்ந் திருக்க வேண்டும். இந்தியாவில் மட்டும் 35 ஆயிரம் பொறியி யல் கல்லூரிகள், 700 பல்கலைக் கழகங்கள் உள்ளன.

பொறியியல் படிப்புக்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால், மருத்துவர், செவிலியர் படிப்புக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

இந்தியாவில் இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள், 12 செவிலியர்கள் தேவை உள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் மருத்துவர் படிப்பு இடங்களுக்கு 28 ஆயிரம் விண்ணப்பங்களும், இந்தியாவில் 50 ஆயிரம் மருத்துவர் இடங்களுக்கு 6 லட்சம் விண்ணப்பங்களும் வருகின்றன. இதனால், இந்திய மாணவர்கள் 14 உலக நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கிறார்கள். எனவே, மருத்துவர் படிப்புக்கான தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

அனைத்து தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் தன்னாட்சி வழங்க வேண்டும். மேலும், இந்தியாவிலுள்ள முக்கிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு எந்த விதிமுறைகளையும் விதிக்காமல் தாராளமயமாக்க வேண்டும். அப்போதுதான் உயர்க்கல்வி பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தனியார் கல்வி நிறுவனங்களின் பிரச்சினைகளை இதுவரை நீதிமன்றங்கள் மூலமே பேசி வருகிறோம். இனி அரசு நிர்வாகம் முன்வந்து பிரச்சினைகளை பேச வேண்டும்.

மேலும் இப்படியான பிரச்சினைகள் சம்பந்தமாக ஜூன் 14-ல் புணேவில் இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் கூட்டம் நடைபெறுகிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த பரிந்துரைப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x