Published : 09 Mar 2016 06:12 PM
Last Updated : 09 Mar 2016 06:12 PM
கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்ததை எதிர்த்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்தார். அவர் 7.12.2012-ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகரசபைத் தலைவருமான ஓ.ராஜா, பாண்டி உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தென்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.மோகனை நியமனம் செய்யக்கோரி பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘வழக்கறிஞர் மோகனை சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிப். 19-ல் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அனைத்து விசாரணையிலும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சிறப்பு வழக்கறிஞராக மோகனை நியமனம் செய்து திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கவும், சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்வது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கேட்டு ஓ.ராஜா சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கருத்து கேட்கவில்லை. தினமும் ஆஜராக வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருப்பதால் எனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவிட்டபடி சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஓ.ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 205 மற்றும் 370 பிரிவுகளில் கீழ் மனுதாரர் மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், அவரது மனுவை தகுதி அடிப்படையில் விசாரித்து மனுதாரர் ஆஜராக தேவையா? இல்லையா? என்பதை நீதித்துறை நடுவர் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT