Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM
விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக அன்னூர் அருகே டிட்கோ சார்பில் 3,832 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவை அன்னூரை அடுத்த குப்பனூர், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர், பொகளூர், இலுப்பநத்தம், பொள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வாழை, தென்னை, மஞ்சள், சோளம், சின்னவெங்காயம், காய்கறிகள் உள்ளிட்டவை அந்தப் பகுதியில் பயிரிடப்படுகின்றன. ஆடு, மாடுகள் வளர்ப்பும் இங்குமுக்கிய தொழிலாக உள்ளது. தினமும் சுமார் 20 ஆயிரம் லிட்டர்பால் இங்கு உற்பத்தியாகிறது.
பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின்கீழ் தண்ணீர் கிடைக்க உள்ளது.இதனால், விவசாயப் பரப்பளவும்,மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள் போன்றவற்றின் சாகுபடியும் அதிகரிக்கும் என விவசாயிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட 6 ஊராட்சிகளில் அடங்கிய சுமார்3,832 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) சார்பில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக முதல்கட்ட பணிகள் அண்மையில் தொடங்கின. இந்த முயற்சி விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. பாதிக்கப்படும் கிராம ஊராட்சிகள் சார்பில் அரசின் முயற்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, "இந்தப் பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், என்ன வகை தொழிற்சாலைகள் வரும் என்பதும், அவர்கள் எவ்வளவு தண்ணீரை பயன்படுத்துவார்கள் என்பதும் தெரியாது. பெருந்துறை சிப்காட்டால் எப்படிகாற்று மாசு, நிலத்தடி நீர் மாசுபட்டதோ, அதே நிலை இங்கும் ஏற்படலாம். இதனால், நிலம் கொடுத்தவர்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தில் யாரும் விவசாயம் செய்ய இயலாது. பூர்வீகமாக வாழ்ந்துவந்தவர்கள் வெளியேறும் நிலை ஏற்படும்.
ஏற்கெனவே இங்குள்ள தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள்தான் பணிபுரிகின்றனர். புதிதாக தொழிற்பேட்டை அமைந்தாலும் இங்குஉள்ளவர்களுக்கு அதனால் பெரிதாக பலன் ஒன்றும் இருக்காது. எனவே, தொழிற்பேட்டை இல்லாத,வேலைவாய்ப்பு அதிகம் தேவைப்படும் மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
தொடக்க நிலையில் பணிகள்
இதுதொடர்பாக வருவாய்துறைஅதிகாரிகள் கூறும்போது, “எங்கெல்லாம் நிலம் இருக்கிறது என டிட்கோ சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கண்டறிந்து வருகின்றனர். அதில், ஒன்றுதான் கோவையில் உள்ள இந்த நிலப்பகுதி. இங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், எங்கெங்கு விவசாயம் நடைபெறுகிறது, எங்கு காலியிடம் உள்ளது என ஆய்வு செய்து வருகிறோம்.
விவசாயிகளின் ஒப்புதலும் வேண்டும் என்பதால், மேற்கொண்டு இந்த திட்டத்துக்கானஎந்தப் பணிகளும் நடைபெறவில்லை. தற்காலிகமாக அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தொடக்கநிலையில் இந்த திட்டம் இருப்பதால், தொழிற்பேட்டையில் எந்தெந்த நிறுவனங்கள் அமையப்போகின்றன என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT