Published : 04 Dec 2021 06:07 PM
Last Updated : 04 Dec 2021 06:07 PM
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா மறைவுக்புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோசய்யா மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கில் செய்தியில்,
‘‘தமிழகத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் மிகச் சிறப்பாக செயலாற்றிய ரோசய்யா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மிக உயரிய பதவியில் இருந்தாலும் மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராக திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து தென்னிந்திய அரசியலில் பயணித்தவர். ஆந்திராவில் மிக அதிகமான நாட்கள் அமைச்சராக பதவி வகித்து சரித்திர சாதனை புரிந்தவர்.
அவரது இழப்பு மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.’’இவ்வாறு கூறியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார் என்கிற செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. ஆந்திர மாநிலத்தில் அமைச்சராகவும், முதல்வராகவும் திறம்பட செயலாற்றி வெற்றிகரமான தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரோசய்யா,
தமிழக ஆளுநராக இருந்தபோது கட்சி பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கின் மூலம் ஆளுமை மிகுந்த சக்தியாகத் திகழ்ந்தவர். அமைதிக்கும், ஆளுமைத் திறனுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மூத்த அரசியல் தலைவர் ரோசய்யா இழப்பு தென்னிந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாததாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.’’என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT