Published : 04 Dec 2021 03:43 PM
Last Updated : 04 Dec 2021 03:43 PM
புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மகாகவி பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க வேண்டும். அப்போது மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக புதுச்சேரி மாறும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை சார்பில், நூறு அடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சுற்றுலாத் தொழில் முனைவோர் கூட்டம் இன்று (டிச.4) நடைபெற்றது.
அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
‘‘புதுச்சேரி இந்திய சுதந்திரத்துக்கு வழிவகுத்ததைப் போல சுற்றுலா வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக வளர்ச்சி பெறும். புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பல நல்ல திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல தீவிரவாதத்தைக் கூட சுற்றுலாவால் முறியடிக்க முடியும். புதுச்சேரியில் இயற்கை வளம் நிறைந்திருக்கிறது. அதில் முதலீடு செய்து சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.
கடற்கரை, இயற்கை வளம், மீன்வளம் ஆகியவை கொண்ட புதுச்சேரியில் ஆன்மிகச் சுற்றுலா, இயற்கை சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த முடியும். புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறது. அதனால் மருத்துவச் சுற்றுலாவைச் சிறப்பாக மேம்படுத்த முடியும்.
கரோனாவுக்குப் பிந்தைய நாட்களில் சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி உலக அளவில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி எல்லோருக்குமான சுற்றுலாத் தலமாக அமைய வேண்டும். சுடுமண் சிற்பக் கலையை மேம்படுத்தும் வகையில் கலாச்சார மையம் அமைய வேண்டும். சுடுமண் சிற்பங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். புதுச்சேரியில் திரைப்பட நகரம் அமைய வேண்டும். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கும் வகையில் திரைப்பட நகரம் அமைப்பது புதுச்சேரிக்கு வருவாயை ஈட்டித் தரும்.
சர்தார் வல்லபாய் படேலுக்கு அமைக்கப்பட்ட வானுயர ஒற்றுமைச் சிலை அமைத்தது, விமர்சனங்களைத் தாண்டி இன்று மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. அதைப் போல புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மகாகவி பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க வேண்டும். அப்போது மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக புதுச்சேரி மாறும். அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பான சுற்றுலா கொள்கை உருவாக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் மாநிலமாக, சுற்றுலாப் பயணிகள் விரும்பத்தக்க நகரமாக புதுச்சேரி அமைய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் திருப்பதியில் நடைபெற்ற தெற்கு மாநிலங்கள் கவுன்சில் கூட்டத்தில் விமான நிலையம் விரிவாக்கம், இலங்கைக்கும்-காரைக்காலுக்கும் சுற்றுலாப் படகுப் போக்குவரத்துக்கு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தொழில் முனைவோருக்கு வரவேற்கத்தக்க தொழில் கொள்கை வகுக்க வேண்டும். ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் இணைந்து ஒரு கூட்டு முயற்சியோடு செயல்பட வேண்டும். திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி கலாச்சாரம் மற்றும் இலக்கியப் பரிவர்த்தனைக்கு ஒரு நல்ல இடமாக மாற வேண்டும். பிற மாநிலங்களோடு இணைந்து ஒரு ஆன்மிகச் சுற்றுலா மையமாக உருவாக வாய்ப்பிருக்கிறது. மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நான் அதற்குத் துணையாக இருப்பேன். அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT