Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைநீர் தொடர்ந்து வயலில் தேங்கியதால், 50 ஆயிரம் ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் அழுகி வீணாகியுள்ளன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர் சாகுபடி 10 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அக்.26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மழை தொடர்ந்து பெய்ததால், டெல்டா மாவட்டங்களில் நவம்பர் முதல் வாரத்தில் 1.50 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் அடங்கிய குழுவினரும், 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து, நவ.23-ம் தேதி மத்திய குழுவினரும் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
ஆனால், ஆய்வுக்கு பின்னரும் தொடர் மழை பெய்ததால், டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. தொடர்ந்து கனமழை பெய்ததாலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், வயல்களில் தேங்கிய வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், நடவு செய்யப்பட்ட இளம் நெற்பயிர்கள் அனைத்தும் ஓரிரு வாரங்கள் தொடர்ந்து நீரில் மூழ்கியே இருந்ததால், அவை அழுகி வீணாகின.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் அந்தலி, குழிமாத்தூர், திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் வடிகால்களில் மழைநீர் விரைந்து வடியாததால் மழைநீர் வயல்களுக்குள் வாரக்கணக்கில் தேங்கியது. இதனால் இப்பகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஏக்கரில் ஒற்றை நாற்று, பாய் நாற்றங்கால் முறைகளில் நடவு செய்யப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் அனைத்தும் அழுகியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 15 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரிலும் என டெல்டா மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் மழைநீரில் அழுகி வீணாகியுள்ளன என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: சம்பா, தாளடி சாகுபடியில் உழவு, விதை, நடவுக்கூலி, அடியுரம் என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்ததும், அனைத்தும் வீணாகிவிட்டது. மத்திய குழுவினர் ஆய்வு செய்த பிறகு பெய்த கனமழையால், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முழுமையாக அழுகிவிட்டன. இதனால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், பயிர்க் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடும் பெற்றுத் தர வேண்டும். மேலும், பாசன வாய்க்கால்களை தூர்வாருவதுபோல, வடிகால்களையும் தூர் வார கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT