Published : 03 Dec 2021 05:41 PM
Last Updated : 03 Dec 2021 05:41 PM
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘பெருங்கற்காலப் புதைவிடங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி தலைமையில் தொல்லியல் அறிஞர் வெங்கடேசன், காணிநிலம் முனிசாமி, ஆசிரியர் அருணாசலம் மற்றும் ஆய்வு மாணவர்கள் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருங்கற்காலப் புதைவிடத்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி கூறியதாவது, ‘மனித இன வரலாற்றை பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், இரும்புக் காலம் என தொல்லியல் அறிஞர்கள் பல வகைப்படுத்துவார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெருங்கற்காலப் புதைவிடங்கள் கிடைத்துள்ளன.
பெருங்கற்காலப் பண்பாடு என்பது ஏறத்தாழ சங்க காலத்தோடு ஒத்துப்போவதாகும். ஏறத்தாழ 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது ஆகும். பெருங்க்றகாலம் என்பது Mega Lathic என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். Mega என்றால் பெரிய Lathic என்றால் பெரியகல் என்பது பொருளாகும். தம்மோடு வாழ்ந்து இறந்து போன தம் முன்னோர்களை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கற்கலைக்கொண்டு புதைந்த இடமாக இது கருதப்படுகிறது.
பெரிய, பெரிய கற்களை மூன்று பக்கம் நிலை நிறுத்தி மேலே பெரிய பலகைக்கல்லை மூடு கல்லாக வைத்து மூடப்படுவது பெருங்கற்கால மக்களின் பண்பாட்டு வழக்கமாக இருந்தது. அந்த வகையில், ஜவ்வாதுமலையில் உள்ள கீழ்ச்சேப்பளி சிறப்பிடம் பெறுகிறது. ஜவ்வாதுமலையில் எங்கள் ஆய்வுக்குழுவினர் இதுவரை மண்டப்பாறை, கல்லாவூர்,கோம்பை போன்ற இடங்களில் கற்திட்டைகளை கண்டறிந்து அவற்றை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில், ஜவ்வாதுமலையில் தற்போது பெருங்கற்காலப் புதைவிடம் எங்கள் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட அரும்பல்பட்டு என்ற ஊரில் உள்ள சாமிபாறை என்ற உயர்ந்த சிகரம் ஒன்று அமைந்துள்ளது. இச்சிகரத்தின் உச்சிப்பகுதி செழுமையான வேளாண் பூமியாக உள்ளது. மக்கள் வேளாண்மைச் செய்வதற்காக இங்கிருந்து பல கற்திட்டடைகளை சிதைந்துள்ளனர். பல கற்திட்டடைகள் பூமியில் புதைந்த நிலையிலும், 3 பக்க கற்கள் மட்டுமே அங்கு காண முடிகிறது. சில கற்திட்டடைகள் மேலே உள்ள மூடுகல்லோடு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. ஏறத்தாழ 10 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கற்திட்டைகள் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள கற்திட்டைகள் அனைத்தும் ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த முன்னோர்களை புதைந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள் ஆகும்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் இங்குள்ளன. காற்றோட்டமான, உயர்ந்த மலை உச்சியில் உள்ள பெரிய பள்ளத்தாக்குகளுக்கு மேலாக இவ்விடம் இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது. இங்கிருந்து பார்த்தால் செங்கம் நகரம் தெரிகிறது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் தீபம் ஏற்றுவதை இங்கிருந்து பார்க்க முடியும் என்பதால் இந்த மலைக்கு ‘சாமிப்பாறை’ என்ற பெயர் வைத்து இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
தமிழகத்தில் கொடுமணல், ஆதிச்சல்லூர் உள்ளிட்ட ஊர்களில் கற்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட முன்னோர் புதைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சமவெளி நிலங்களுக்கு இணையாக அல்லது அதற்கு பழமையான பண்பாட்டு அடையாளங்கள் மலை நிலத்தில் கிடைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
குறிப்பாக திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கற்திட்டைகள், கற்கோடாரிகள், நடுகற்கள், கல்வெட்டுகள் என தொடர்ச்சியாக வரலாற்று சிறப்புமிக்க தடயங்கள் கிடைத்து வருவது சிறப்புக்குரியதாகும். சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் பாடப்பட்ட மலை ஜவ்வாதுமலை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜவ்வாதுமலை அரும்பல்பட்டு சாமிபாறையில் உள்ள கற்திட்டைகளை அகழ்வாராய்ச்சி செய்யதால் பல வரலாற்று உண்மைகள் உலகத்துக்கு தெரியவரும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT