Published : 03 Dec 2021 04:31 PM
Last Updated : 03 Dec 2021 04:31 PM

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விதிகளைப் பின்பற்றாமல் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி.யும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. 2018-ல் நீக்கப்பட்ட பிறகு அதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எப்படி வழக்குத் தொடரமுடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதில் கே.சி.பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, தன்னை நீக்கிய பிறகுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் தன்னை நீக்கம் செய்தது செல்லாது என்றும், விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தன்னைப் போல 27,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வழக்கில் இணையத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

விருப்ப மனு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட பிரசாத் சிங் ஆஜராகி, விதிகளைப் பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி நடப்பதாகவும், விருப்ப மனு வாங்கச் சென்றபோது வெளியில் துரத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இன்று வழக்குத் தொடராதவர்கள் வாதிட முடியாது என்றும், எதிர்த் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், எதிர்த் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கு முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் தயங்காது எனவும் தெரிவித்தார்.

அதிமுக மற்றும் அதன் நிர்வாகிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி, மூன்றாண்டுகளாகக் கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்குத் தொடர முடியும் என்றும், நீக்கத்தை எதிர்த்து சிவில் வழக்காகத் தொடர்ந்து, வென்று, பின்னர் இந்த வழக்கைத் தொடரலாம் என விளக்கம் அளித்ததுடன், வழக்கில் பதிலளிக்கவும் அவகாசம் கோரினர்.

கே.சி.பழனிசாமி தரப்பில், தேர்தலை 5 நாளில் அதிமுக நடத்தும்போது, பதில் மனுவை 2 நாளில் தாக்கல் செய்ய முடியும் என்றும், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கவும், அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பதிலளிக்க நீண்ட அவகாசம் வழங்கினால், ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பிலும், காவல்துறை பாதுகாப்புடனும் தேர்தல் நடத்த வேண்டுமெனவும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பையும் கேட்காமல் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் விருப்பப்பட்டால் மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

அதேசமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிர்வாகிகள் தேர்வு வரை சட்ட விதிமீறல் இருப்பது தெரியவந்தால், தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் வழக்கு குறித்து அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x