Published : 03 Dec 2021 02:08 PM
Last Updated : 03 Dec 2021 02:08 PM

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்; தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? - மக்களவையில் சு.வெங்கடேசன் கேள்வி

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்; தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா என்று மக்களவையில் எம்.பி. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மக்களவைவியில் எம்பி. சு.வெங்கடேசன் பேசும்போது, “ தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இது சார்ந்து மத்திய அரசு எந்தவித தலையீடும் செய்யாமல் இருக்கிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் துவாரகா மாவட்டத்தில் ஓகா என்ற இடத்தில் குஜராத் மீனவர் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்ட நிகழ்வை ஒட்டி உடனடியாக மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்தது. அது மட்டுமல்ல பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து நேரடியாகவும் கண்டனத்தை பதிவு செய்தது என்பதை இந்த அவைக்கு கவனப்படுத்துகிறேன்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள், பலர் சிறையிலே அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் மத்திய அரசின் தலையீட்டைக் கோரி கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த தலையீடும் செய்யவில்லை, எப் ஐ ஆர் கூட பதிவு செய்யவில்லை. இலங்கை தூதரகத்தினுடைய உயர் அதிகாரிகளை அழைத்து எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை.

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம், தமிழக மீனவர்களுக்கு வேறொரு நியாயமா? பாகிஸ்தான் அரசு பற்றிய அணுகுமுறை என்றால் ஒன்று, இலங்கை அரசு குறித்த அணுகுமுறை என்றால் வேறொன்றா?. இது வலிமையான கண்டனத்திற்கு உரியது. தமிழக மீனவர்களுடைய மீன்பிடி உரிமையை முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை கடற்படையினுடைய தாக்குதலுக்கு இந்த அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை இந்த அவையிலே ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x