Published : 03 Dec 2021 01:02 PM
Last Updated : 03 Dec 2021 01:02 PM
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி, ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மல்லவாடி - அரசு மறுவாழ்வு இல்லத்திற்கான புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து, பார்வைக் குறைவு உடையோருக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதன்படி, இன்று (03.12.2021) தலைமைச் செயலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறந்த முறையில் சேவை புரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருதினை ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவனுக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருதினை விருதுநகர் மாவட்டம் சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளைக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்குக் கற்பித்ததற்காக ஜெயந்திக்கும், பார்வைக் குறைவு உடையோருக்குக் கற்பித்ததற்காக மாரியம்மாளுக்கும், சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரிபவர் விருதினை மாதேஸ்வரன், ரேவதி மெய்யம்மை, முனைவர் ராஜா, தங்ககுமார், ஜோயல் ஷிபு வர்க்கி, அப்துல் லத்தீப், அனுராதா, சரண்யா, ஜீ. கணேஷ் குமார் ஆகியோருக்கும் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.
மேலும், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதினை முத்துச்செல்வி மற்றும் சர்மிளா ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநருக்கான விருதினை ரதீஷுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாகப் பணியாற்றிய நடத்துநருக்கான விருதினை திருவரங்கத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினார்.
விருது பெறும் அனைத்து நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்காக பரனூரில் 1971ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று கருணாநிதியால் அரசு மறுவாழ்வு இல்லம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் பத்து அரசு மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு, உறைவிடம், உடுக்க உடை, மருத்துவ வசதிகள் இல்லவாசிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இல்லவாசிகளுக்குப் பாய் நெய்தல், துணி நெய்தல், தையல் மற்றும் காலணி தயாரிப்பு போன்ற பல்வேறு தொழிற்பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கேற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மல்லவாடியில் அரசு மறுவாழ்வு இல்லம் 1973-ஆம் ஆண்டு 425 பயனாளிகள் தங்கும் வகையில் 14,300 சதுர அடி நிலப்பரப்பில் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த அரசு மறுவாழ்வு இல்லக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால், இல்லவாசிகளின் நலன் கருதியும், அவர்களின் பயன்பாட்டிற்காகவும், மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு 1 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த மறுவாழ்வு இல்லத்தில் 40 நபர்கள் தங்கும் வகையில் 20 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது இவ்வில்லத்தில் 36 இல்லவாசிகள் தங்கிப் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், மாவட்ட நூலக ஆணைக் குழுக்களின் கீழ் செயல்படும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாகவுள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்குப் பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த பார்வைக் குறைவு உடையோருக்குச் சிறப்பு நேர்வாக நூல் கட்டுநர் பணியிடத்திற்கு 17 நபர்களுக்கும், நூல் கட்டும் உதவியாளர் பணியிடத்திற்கு 14 நபர்களுக்கும் என மொத்தம் 31 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் ஸ்டாலின் 5 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.”
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT