Published : 03 Dec 2021 10:50 AM
Last Updated : 03 Dec 2021 10:50 AM
சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"சித்திரை மாதம் முதல் நாளே ஆண்டின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்ற கோடான கோடி தமிழர்களின் எண்ணத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழர்களுக்கான புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்பதற்கு வாழ்வியல் காரணங்களும் உண்டு. தமிழர்கள் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடியதை வரலாறு தெரிவிக்கிறது.
பெரியோர்கள் சித்திரை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகக் கொண்டாடினார்கள். குறிப்பாகத் தமிழக அரசின் சார்பில் அதிகாரபூர்வமாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14-ம் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட வேண்டும்.
இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள்தான் என்பதை மாற்றாத வகையில் ஆட்சி செய்பவர்களும், ஆட்சி செய்ய வருபவர்களும் தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தமிழர்க்கு சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
எனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், தமிழ் மொழி உணர்வாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் கோரிக்கையான சித்திரை முதல் நாளே புத்தாண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு நிரந்தர அங்கீகாரம் அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT