Published : 03 Dec 2021 10:11 AM
Last Updated : 03 Dec 2021 10:11 AM
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியின் சக பயணிகள் 140 பேரையும் அடுத்த ஒரு வாரத்திற்கு தீவிரமாகக் கண்காணிக்குமாறு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நேற்று இரவு 10.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் மூலம் வந்த பயணிகள் 141 பேரும், விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அரசு வழிகாட்டுதலின்படி, அவர்கள் அனைவருக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிங்கப்பூர் தமிழரான 55 வயது ஆண் ஒருவருக்கு மட்டும் கரோனா உறுதியானது. இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை, ஒமைக்ரான் சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அது பெங்களூருவுக்கு மரபணு வரிசைப்படுத்துதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விமான நிலையத்தில் ஆர்டி பிசிஆர் பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு சிங்கப்பூர் தமிழர் உட்பட 141 பயணிகளும் ஒரே பகுதியில் தான் தங்கியுள்ளனர். அவர்களில் பலருடன் பாதிக்கப்பட்ட பயணி சகஜமாக, நெருக்கமாக பேசியிருந்துள்ளார்.
இதனால், பயணிகள் அனைவரின் முகவரியையும் பெற்றுள்ள மாவட்ட சுகாதாரத் துறை, அந்தந்த பகுதி சுகாதாரப் பணியாளர்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபட வலியுறுத்தி உள்ளது.
அந்த 140 பேரும் ஒருவாரத்துக்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், தங்கள் உடல்நலனில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT