Last Updated : 02 Dec, 2021 10:01 PM

 

Published : 02 Dec 2021 10:01 PM
Last Updated : 02 Dec 2021 10:01 PM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கு; உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுக: ஊடகங்களுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல் 

மதுரை 

பாலியல் சம்பவங்களில் பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது அனைத்து ஊடகங்களின் கடமையாகும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த கிருபா பிரியதர்ஷினி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதும், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் குற்றம் என போக்சோ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் செய்திகளை வெளியிடுவது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை.

இதேபோல் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களின் தனிப்பட்ட தகவல்கள் பதிவிடுவதை முறைப்படுத்தும் மத்திய தகவல் ஒளிபரப்பு சட்டமும் முறையாக பின்பற்றப்படுவதில்லை.

எனவே, யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான தகவல்களை நீக்கவும், பாலியல் சம்பவங்களில் பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், அடையாளங்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் உரிமத்தை ரத்து செய்யவும், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக மக்களுக்கு உடனுக்குடன் செய்திகள் சென்றடைய மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் உதவியாக உள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன.

பல ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்களை மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை ஊடகத்துறையினர் கடைபிடிக்க வேண்டும். இது ஊடகத்துறையின் கடமையாகும். ஆனால் ஊடகத்துறையில் சிலர் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காமல் உள்ளனர் என்றனர்.

பின்னர் மனு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x