Published : 02 Dec 2021 04:20 PM
Last Updated : 02 Dec 2021 04:20 PM
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 25-ந் தேதி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் மக்கள் தொடர்ந்து 7 நாட்களாக மழை தண்ணீருக்கு நடுவே தீவில் வசிப்பது போன்று வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.
முதல்வர் மதியம் 1.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு மதிய உணவு முடித்துக் கொண்டு 2.30 மணிக்கு புறப்பட்டார். அவர் மாலை 2.52 மணிக்கு தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதிக்கு வந்தார். அங்கு மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அந்த பகுதி மக்கள் பிரையண்ட்நகர் பகுதியில் மழைநீர் தேங்குவதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும். அடுத்த ஆண்டு மழை பெய்யும் போது மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் பலர் மனு கொடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
மாநகராட்சி அலுவலகத்தில் மழை வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் 3.45 மணிக்கு அம்பேத்கார் நகரில் ஆய்வு செய்தார். மாலை 4 மணிக்கு தூத்துக்குடி ஏ.வி.எம். மகாலில் நடந்த நிகழ்ச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து ரகுமத்நகர், முத்தம்மாள் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதை ஆய்வு செய்தார்.
மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 4.50 மணிக்கு புதூர்பாண்டியாபுரம் அருகே மாநகராட்சி சார்பில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டு உள்ள கால்வாயை ஆய்வு செய்தார். 5 மணிக்கு கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
ஆய்வின் போது, கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா(ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன்(விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ்(ஸ்ரீவைகுண்டம்), மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT