Published : 02 Dec 2021 01:24 PM
Last Updated : 02 Dec 2021 01:24 PM
கரூர் அருகே மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும்போது பாலியல் ரீதியாக வண்ணங்களை குறிப்பிட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பாகநத்தத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பன்னீர்செல்வம் (48). இவர் வகுப்பில் அறிவியல் பாடங்கள் எடுக்கும்போது ஆண், பெண் இனபெருக்க உறுப்புகள், பெண்களுக்கான மாதவிடாய் போன்ற பாடங்களை பிற பாடங்களை தவிர்த்து முன்னதாக நடத்தியதாகவும், வகுப்பெடுக்கும்போது பாலியல் ரீதியான வண்ணங்களை பயன்படுத்தி குறிப்பிட்டு பேசியதாகவும், ஆபாச வார்த்தைகளால் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் பள்ளியிலும், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதனடிப்படையில் உதவி ஆசிரியர் பன்னீர்செல்வத்தை மாவட்டக் கல்வி அலுவலர் விஜேயந்திரன் பணியிடை நீக்கம் செய்து நேற்று (டிச. 1ம் தேதி) உத்தரவிட்டார்.
கரூரில் கடந்த மாதம் தனியார் மருத்துவர் பள்ளி மாணவிக்கு அளித்த பாலியல் சீண்டலில் போக்சோவில் கைது செய்யப்பட்டது, தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டது, அதன் தொடர்ச்சியாக அப்பள்ளி கணித ஆசிரியர் மாணவர்கள் முன் அவமானமாக இருப்பதாகவும், மாணவி தற்கொலை தான் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டது என அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டம் மூலம் பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தி 9 முதல் பிளஸ் 2 வரைலியான 26,000 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளதா என கருத்து சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் பாடங்களை ஆபாசமாக நடத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT