Published : 02 Dec 2021 10:20 AM
Last Updated : 02 Dec 2021 10:20 AM

பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்க: ஜி.கே.வாசன்

கோப்புப் படம்

சென்னை

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெறும் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழக அரசு, மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களில் கரும்பு உட்பட பல்வேறு பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத்தொகுப்பை விவசாயிகளும், பொது மக்களும் பயன்பெறும் வகையில் வழங்க வேண்டும்.

வருகின்ற 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் வருகின்ற தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் உள்ள 20 பொருட்களோடு கரும்பும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் தங்களிடம் கரும்பை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். காரணம் பருவமழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் ஓரளவுக்கு விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீள்வார்கள். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

குறிப்பாக மாநில அளவில், மாவட்ட அளவில் விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் கிடைக்கும் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தனிக்கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.

விவசாயிகளிடம் கிடைக்காத பொருட்களை வியாபாரிகளிடம் வாங்கலாம். இதன் மூலம் அந்தந்த மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் பயனடைவார்கள். விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் கொள்முதல் செய்தால் அவர்களும், பொது மக்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

எனவே தமிழக அரசு, பொங்கல் பரிசு வழங்கும் தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் நேரடியாக கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்."

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x