Published : 01 Dec 2021 01:33 PM
Last Updated : 01 Dec 2021 01:33 PM
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு தீர்மானம் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சிறப்பு தீர்மானத்தை அதிமுக செயற்குழு கொண்டு வந்தது.
சிறப்பு தீர்மானம் விவரம்:
1.
முன்பு இருந்த விதி
அதிமுகவில் முன்னர் இருந்த விதியின்படி பொதுக்குழு உறுப்பினர்களே கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
திருத்தப்பட்ட விதி
அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
2.
முன்பு இருந்த விதி
அதிமுகவின் அனைத்து சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும்.
திருத்தப்பட்ட விதி
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதியை, பொதுக்குழுவால் மாற்ற முடியாது.
3.
முன்பு இருந்த விதி
அதிமுகவின் சட்டவிதிகளை தளர்ந்து அதிகாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு
திருத்தப்பட்ட விதி
அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற விதியில் தளர்வை ஏற்படுத்துவதற்கோ, விலக்கு அளிப்பதற்கோ ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் இல்லை.
பிற தீர்மானங்கள் விவரம்:
1. எம்.ஜி.ஆர். கண்ட மகத்தான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு
2. நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 66 இடங்களையும், கழக கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும், ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெறும் வகையில் உழைத்திட்ட, கழக முன்னணியினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் பாராட்டுக்கள்; கழகத்தோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும், இயன்ற வகைகளில் எல்லாம் உடன் உழைத்த, உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
3. நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் திமுக-வின் நேர்மையற்ற பிரச்சார முறைகளுக்குக் கண்டனம்
4. திமுக அளித்த வாக்குறுதிகள் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாகத் தெரிவிக்க வற்புறுத்தியும்; அவ்வாறு தெரிவிக்காவிடில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை
5. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், தமிழ் நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றச் செயல்கள்; கொலை, கொள்ளைகள்; வழிப்பறி சம்பவங்கள்; போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை; வணிகர்கள் மீதான தாக்குதல்கள்; பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க திமுக அரசு முன்வர வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் திமுக அரசுக்குக் கண்டனம்
6. மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும்; மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட திமுக அரசை வலியுறுத்தல். மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்கத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம்
7. விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் கடுமையாக உழைக்கவும்; திமுக-வின் முறைகேடுகளைத் தடுக்கத் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தல்
8. அதிமுகவை கட்டிக் காத்து, ஒற்றுமை பேணி, எதிர்கால தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற, கழக முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம்
9. நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டும், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியும் வெற்றி பெற்றிருக்கும் திமுக-வுக்குக் கண்டனம்
10. மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்
11. மழை, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின் துயர் துடைக்க திமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல்.
ஆகிய தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தால் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT