Published : 01 Dec 2021 12:15 PM
Last Updated : 01 Dec 2021 12:15 PM
ஒமைக்ரான் வைரஸ் பரவலில் இருந்து பணியாளர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இன்று அச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"கரோனோ வைரஸைத் தொடர்ந்து கரோனாவில் புதிய வகை தொற்றான ஓமைக்ரான் வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக பொது மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இந்த வகை நோய் தொற்றிலிருந்து டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்க டாஸ்மாக் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பணியாளர்களுக்கு முகக் கவசம், கையுறை, சானிடைசர் தரமானதாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது சம்பந்தமாக உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. இது பணியாளர்கள் நலனில் அக்கறையின்றி உள்ளதை காட்டுவதாக தெரிகிறது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பணியாளர்கள் நலனில் அக்கறை இல்லாத ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதால் இவ்வாறு உள்ளதாக கருத தோன்றுகிறது.
எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, டாஸ்மாக் பணியாளர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் இது சம்பந்தமாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, இது சம்பந்தமாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உடன் வழங்கிடவும், இதனை அமுல்படுத்த முற்படும்போது எவ்வித அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
இது தொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் முதல்வர் ஸ்டாலின், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT