Published : 30 Nov 2021 05:28 PM
Last Updated : 30 Nov 2021 05:28 PM
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனத்தை கைவிட்டு, நிரந்தர முழுநேர ஆசிரியர்களை தேவைக்கேற்ப நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாமல், வருமானம் இழந்த பெற்றோர்கள் பலர், தனியார் பள்ளியில் கட்டணத்தை செலுத்த இயலவில்லை. இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் செலுத்தினர்.
குறிப்பாக, 2020-21-ம் ஆண்டில் 1,00,000-க்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருந்தார்கள். இந்த சேர்க்கை விகிதம் வரும் 2021-22 கல்வியாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிடுவது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில், மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதற்குத் தகுந்தாற்போல் அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.
இந்த நிலையில், 2021 - 2022ஆம் கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நியமிக்கப்படும் முதுநிலை ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே பணி புரிய வேண்டுமென்றும், அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், கடந்த கல்வியாண்டின் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக சரிசெய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருப்பது வேதனையானது.
நியமிக்கப்படவிருக்கும் முதுநிலை ஆசிரியர்களும் கூட ரூ.10,000 ஊதியத்திற்கு, ஐந்து மாத ஆசிரியர்கள் தான். இத்தகைய நடவடிக்கை, மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத நிலையை காட்டுவதோடு, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது.
எனவே, ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனத்தை ரத்து செய்வதோடு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து பாடப்பிரிவுக்கும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள இச்சூழலில், கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
கரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுப் பள்ளிகளை நோக்கி வந்த மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள, கல்வித்தரத்தை உயர்த்தவும், அரசுப் பள்ளிக்கூடங்களின் தரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு அமைப்பது தொடர்பாக, 2009 -ல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
எனவே, கருணாநிதி எண்ணத்தை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT