Published : 30 Nov 2021 04:04 PM
Last Updated : 30 Nov 2021 04:04 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. நாகர்கோவில் காவலர் குடியிருப்பில் 4 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதுடன், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தினமும் 5 பேருக்குள் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தது. இந்நிலையில் கரோனாவில் புதிய வைரஸான ஒமைக்ரான் அச்சம் நிலவி வருவதால் மீண்டும் கரோனா தடுப்பு நடவடிக்கை வேகம் பிடித்திருப்பதுடன், சுகாதாரத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா தொற்று 10 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக முன்களப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸார் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமாருக்குக் காய்ச்சல் தொடர்ந்து இருந்து வந்ததால் அவருக்கு நடத்திய கோவிட் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலீஸாருக்கு கரோனா தொற்று இருந்ததைத் தொடர்ந்து நாகர்கோவில் கணேசபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸாரின் குழந்தைகள், மற்றும் குடும்பத்தினரிடம் சுகாதாரத் துறையினர் சளி மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கணேசபுரம் காவலர் குடியிருப்பில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெகு நாட்களுக்குப் பின்னர் ஒரே பகுதி, மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் கணேசபுரம் காவலர் குடியிருப்புப் பகுதியில் இன்று வந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குடியிருப்பு வளாகம், மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள், வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. வெளிநபர்களைக் குடியிருப்புப் பகுதியில் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கரோனா தொற்று ஏற்பட்ட காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் கோவிட் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அமைந்திருக்கும் நாகர்கோவில், மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பள்ளிகளைக் கண்டறிந்து அங்கு நகராட்சி சுகாதார அலுவலர்கள் கிருமி நாசினி தெளித்தனர். அத்துடன் பள்ளிக் குழந்தைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குமரியில் கரோனா தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மீண்டும் தடுப்பு நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. முகக் கவசத்தை மக்கள் அலட்சியம் காட்டாமல் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குமரி- கேரள சோதனைச் சாவடியான களியக்காவிளையில் மீண்டும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT