Published : 30 Nov 2021 03:04 PM
Last Updated : 30 Nov 2021 03:04 PM
தென்னாப்பிரிக்க விடுதலைப் போராளி சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
''தென் ஆப்பிரிக்கத் தமிழ்ச் சமூகத்தால், சுவாமி என அன்புடன் அழைக்கப்பெற்ற, அந்நாட்டின் விடுதலைப் போராளிகளுள் ஒருவரான சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் 94ஆம் அகவையில், இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
1944 முதல் தன்னைப் பொதுவாழ்வுக்கு ஒப்படைத்துக் கொண்டார். 1950ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
1955ஆம் ஆண்டு, அந்நாட்டின் விடுதலைப் பட்டயத்திற்கு ஏற்பு அளிக்கப்பட்ட கிளிப்டவுன் சொவேட்டோ மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்களுள் எஞ்சி இருக்கின்ற ஒருசிலருள் சுவாமிநாதனும் ஒருவர்.
அரசியல் தலைவர், சமூகப் போராளி, தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட சுவாமிநாதன், நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற அனைத்துப் போராட்டக் களங்களிலும் பங்கேற்று இருக்கின்றார். நாடு விடுதலை பெற்ற பிறகும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்காக உழைத்தார். பல்வேறு சமூக அமைப்புகளில் உயர் பொறுப்புகளை வகித்து இருக்கின்றார்.
காந்திய வழி அறப்போராளிகளுள் ஒருவராகத் திகழ்ந்த மாமனிதர் சுவாமிநாதன் கருப்ப கவுண்டனின் மறைவுக்கு, மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்''.
இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT