Published : 30 Nov 2021 02:24 PM
Last Updated : 30 Nov 2021 02:24 PM

மழை பாதிப்பு: இதுவரை நடந்துள்ள நிவாரணப் பணிகள் என்னென்ன?- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பட்டியல்

பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

சென்னை

தமிழகத்தில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பாதிப்பு இடங்களில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் மழைப்பொழிவை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 17.2 மி.மீ. ஆகும். ஒரு இடத்தில் மிக கனமழையும், 13 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 56.95 மி.மீட்டரும், தென்காசி மாவட்டத்தில் 48.48 மி.மீட்டரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 44.78 மி.மீட்டரும், விருதுநகர் மாவட்டத்தில் 43.05 மி.மீட்டரும், மதுரை மாவட்டத்தில் 42.21 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39.84 மி.மீட்டரும், தேனி மாவட்டத்தில் 38.20 மி.மீட்டரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 36.89 மி.மீட்டரும், விழுப்புரம் மாவட்டத்தில் 33.50 மி.மீட்டரும், சிவகங்கை மாவட்டத்தில் 33.27 மி.மீ. மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தில், வீரபாண்டி என்னும் இடத்தில் 119.0 மி.மீட்டர் கனமழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 29.11.2021 வரை 649.4 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 356.0 மி.மீட்டரை விட 82 சதவீதம் கூடுதல் ஆகும்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8075 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 2,806 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவான 224.297 டிஎம்சி, 209.945 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இது 93.60 சதவீதம் ஆகும்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர அணைகளிலிருந்து, நீர்த்திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, பாதுகாப்பான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருப்பு வைத்துக்கொண்டு, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 29.11.2021 நாளிட்ட அறிக்கையில், இன்று 30.11.2021 கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை 01.12.2021, தென்மாவட்டங்களிலும், மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்களில் சென்னையில் - 2 குழுக்கள், திருவள்ளுரில் - 1 குழு, காஞ்சிபுரத்தில் - 1 குழு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து வருவாய், வேளாண், தோட்டக்கலை துறைகள் மூலம் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நிவாரண முகாம்கள்

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 279 முகாம்களில் 20,836 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 2,148 நபர்கள் 15 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 1,20,160 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

◦ திருவள்ளூர் மாவட்டத்தில், 605 நபர்கள் 11 நிவாரண முகாம்களிலும்,
◦ செங்கல்பட்டு மாவட்டத்தில், 2605 நபர்கள் 44 நிவாரண முகாம்களிலும்,
◦ காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1335 நபர்கள் 34 நிவாரண முகாம்களிலும்,
◦ விழுப்புரம் மாவட்டத்தில், 1086 நபர்கள் 33 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

◦ கடலூர் மாவட்டத்தில், 3689 நபர்கள் 24 நிவாரண முகாம்களிலும்,
◦ நாகப்பட்டினம் மாவட்டத்தில், 3260 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,
◦ மயிலாடுதுறை மாவட்டத்தில், 771 நபர்கள் 3 நிவாரண முகாம்களிலும்,
◦ தஞ்சாவூர் மாவட்டத்தில், 409 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
◦ புதுக்கோட்டை மாவட்டத்தில், 105 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,
◦ ராமநாதபுரம் மாவட்டத்தில், 224 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
◦ தூத்துக்குடி மாவட்டத்தில், 544 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,
◦ கன்னியாகுமரி மாவட்டத்தில், 583 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,
◦ பெரம்பலூர் மாவட்டத்தில், 44 நபர்கள் 3 நிவாரண முகாம்களிலும்,
◦ ராணிப்பேட்டை மாவட்டத்தில், 271 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும்,
◦ திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 125 நபர்கள், 1 நிவாரண முகாமிலும்,
◦ திருப்பத்தூர் மாவட்டத்தில், 603 நபர்கள், 16 நிவாரண முகாம்களிலும்,
◦ திருவண்ணாமலை மாவட்டத்தில், 1023 நபர்கள் 33 நிவாரண முகாம்களிலும்,
◦ வேலூர் மாவட்டத்தில், 3,285 நபர்கள் 36 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் மழையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், 522 கால்நடைகளும், 3,847 கோழிகளும் இறந்துள்ளன. 2,623 குடிசைகள் பகுதியாகவும், 168 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2,791 குடிசைகளும், 467 வீடுகள் பகுதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 474 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி

◦ மழைநீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 227 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 334 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகின்றன.
◦ இதுவரை 15,111 மருத்துவ முகாம்கள் மூலம் 4,88,140 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
◦ மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், மழை நீரை வெளியேற்ற 46 ஜேசிபிகளும், 918 அதிகத் திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
◦ பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 8571 புகார்கள் வரப்பெற்று, 2681 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
◦ மாநில அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 7247 புகார்கள் வரப்பெற்றதில், 5670 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
◦ மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 5332 புகார்களில், 5195 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
◦ சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி
தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x