Published : 30 Nov 2021 08:26 AM
Last Updated : 30 Nov 2021 08:26 AM
கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தேனி, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் ஏற்கெனவே நேற்றும், இன்றும் (நவ.29, 30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 2 நாட்கள் மழை நிலவரம்:
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 30-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டிச.1-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 2-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT