Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM

அமைச்சர் செந்தில் பாலாஜி - ஜோதிமணி எம்பி இடையேயான நட்பில் விரிசல்: வெட்டவெளிச்சமாக்கிய உள்ளிருப்புப் போராட்டம்

கரூர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்ட எம்பி ஜோதிமணியின் உள்ளிருப்புப் போராட்டத்தால், அவருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே இருந்து வந்த ஈகோ மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது அமைச்சராக உள்ளசெந்தில்பாலாஜி, 2018 டிசம்பரில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், இந்தத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தம்பிதுரையை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார்.

அதேசமயம், அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜோதிமணியும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது, தனது சகோதரி ஜோதிமணிக்கு ஓட்டு போட வேண்டும் என்று செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தார். அதேபோல, ஜோதிமணியும் அண்ணன்செந்தில் பாலாஜிக்கு வாக்களியுங்கள் என்று பாசம் காட்டி பிரச்சாரம் செய்தார். அதன்பின், இருவரும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் சேர்ந்தே கலந்து கொண்டனர். ஒருமுறை ஜோதிமணி வெளிநாடுசென்றபோது, அவரை செந்தில்பாலாஜி விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார். அப்போது, செந்தில் பாலாஜி தனக்கு தாயும், தந்தையுமாக இருந்து வழியனுப்பி வைத்ததாக ஜோதிமணி குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்பு, சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஜோதிமணி பிரச்சாரம் செய்தார். இதில் வெற்றிபெற்று, செந்தில் பாலாஜி அமைச்சரான பின், இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. பின்னர் நடைபெற்றஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலின்போது ஜோதிமணியை திமுகதரப்பிலிருந்து பிரச்சாரத்துக்கு அழைத்தபோது, “மணப்பாறையில் இருக்கிறேன், வேடசந்தூரில் இருக்கிறேன், பிறகு தேதி தருகிறேன்” என ஏதாவது ஒரு காரணம் சொல்லிஅவர் பிரச்சாரத்துக்கு வருவதைதவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்துகலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் முகாமை நடத்தக் கோரி ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த25-ம் தேதி முதல் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.அன்று இரவு அவர் அங்கேயேபடுத்துறங்கி, மறுநாளும் (நவ.26) போராட்டத்தைத் தொடர்ந்தார்.

அன்றைய தினம் கரூரில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் ஜோதிமணியை சந்தித்து சமாதானப்படுத்தவும் இல்லை. அதன்பின், ஜோதிமணியுடன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, உள்ளிருப்புப் போராட்டத்தை ஜோதிமணி கைவிட்டார்.

அதன் பின்பு, ஜோதிமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘மத்தியஅரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் நடத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மக்கள் நலனில்அக்கறை உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் கே.என்.நேரு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, திருச்சி எம்பி திருநாவுக்கரசர், சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.

இதில், உள்ளூர் அமைச்சரான செந்தில் பாலாஜியின் பெயரை குறிப்பிடாத நிலையில், அவர்களுக்கு இடையே இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கருத்தறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்பி ஜோதிமணி ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, இருவரின் போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க திமுகவினர் மறுத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘‘அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது கூட்டணிக்கு நல்லதல்ல” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x