Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM
பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்க்க, நகர் முழுவதற்குமான மழைநீர் வடிகால் வரைபடத்தை உருவாக்கி, அதனை அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று கட்டுமானப் பொறியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆண்டுதோறும் மழைப் பொழிவும், வெள்ள பாதிப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சென்னையில் ஏற்கெனவே உள்ள மாஸ்டர் பிளான் மற்றும் அதன் செயலாக்கத்தில் உள்ள குறைகள்தான் மழைநீர் தேக்கத்துக்கான காரணம் என்று கூறும் கட்டுமானப் பொறியாளர்கள், சென்னை புறநகரில், குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுசேரி, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர், ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகே வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கும் நகரமயமாக்கலுக்கும் அரசு அனுமதிக்க வேண்டு்ம். இதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின்போது மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து, அவற்றை சரிசெய்ய முறையாக நடவடிக்கை எடுக்காததும், தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில் இருந்த குறைபாடுகளும்தான் பல பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மழைநீர் தேங்கியதற்கு காரணம் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.
இதுதொடர்பாக இந்திய கட்டுநர்கள் சங்க முன்னாள் தலைவர் எல்.வெங்கடேசன் கூறியதாவது:
மக்கள்தொகை மற்றும் மழைப்பொழிவுக்கு ஏற்ப மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் இருப்பது அவசியம். சென்னை பெருநகர் முழுவதற்குமான மழைநீர் வடிகால் வரைபடம் இல்லை. கிரேடியன் ஃப்ளோ, பிரஷர் ஃப்ளோ என தண்ணீர் செல்வதில் இரண்டு வகைகள் உண்டு. கிரேடியன் ஃப்ளோ என்பது தண்ணீர் மேட்டுப் பகுதியில் இருந்து இறக்கத்தை நோக்கிச் செல்வது. இப்படித்தான் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இருக்க வேண்டும். சென்னை முழுவதும் அதுபோல இல்லாததே மழைநீர் தேக்கத்துக்கான முக்கிய காரணம்.
பிரஷர் ஃப்ளோ என்பது மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதாகும். உதாரணத்துக்கு அசோக் நகர் 18-வது அவென்யூ சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மேடான பகுதியில் உள்ள குழாயுடன் இணைக்கப்பட்டிருப்பதைக் கூறலாம். அவ்வாறு இருந்தால் மழைநீர் எப்படி வடியும்?
நகரில் மழைநீர் கால்வாய் சில இடங்களில் 4 அடி ஆழம், 6 அடி ஆழம், 2 அடி ஆழத்திலும் செல்லும். ஆனால், அவை அனைத்தும் கடல் மட்டத்தை அடிப்படை அளவாகக் கொண்டு கணக்கிடும்போது, தாழ்வான பகுதிகளை நோக்கிச் செல்வதாக இருந்தால் மட்டுமே மழைநீர் வடிவதில் பிரச்சினை இருக்காது. சென்னை நகர் முழுவதும் அவ்வாறு இல்லை என்பதால், மழைநீர் வடிகாலை ‘ரீடிசைன்’ செய்து புதிய வரைபடம் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தற்போது 20 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப மட்டுமே மழைநீர் வடிகால் இருக்கிறது. ஆனால், தற்போதைய மக்கள்தொகை 80 லட்சம். ‘ரீடிசைன்' செய்யப்படும் மழைநீர் வடிகால் வரைபடம் 1.50கோடி மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு, இருக்கின்ற மழைநீர் வடிகால், புதிய மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சென்னை மாநகரில் தற்போது 4,650 கி.மீ. நீளத்துக்கு கழிவுநீர் குழாய்கள்அமைக்கப்பட்டுள்ளன. 1,894 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும்789 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால்களில்மழைநீர் தடையின்றி செல்ல தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளைச் செய்துள்ளோம்’’ என்றனர்.
தமிழக அரசு, பகீரத முயற்சி செய்தாவது மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டு்ம் என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT