Published : 29 Nov 2021 09:04 PM
Last Updated : 29 Nov 2021 09:04 PM

ஆண்டிற்கு ஒரு முறை செயல்படும் சபரிமலை தற்காலிக தபால் நிலையம் செயல்பட தொடங்கியது

மதுரை

ஆண்டிற்கு ஓரு முறை மட்டுமே செயல்படும் சபரிமலை தற்காலிக தபால்நிலையம், மண்டல பூஜையை முன்னிட்டு செயல்பட தொடங்கியிருக்கிறது.

அதனால், நாடு முழுவதும் இருந்து வேண்டுதல் தபால்கள், ஆசி பெறுவத்கான திருமண அழைப்பிதழ்கள் சபரிமலை ஐய்யப்பனுக்கு குவிந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலும் ஒன்று. ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருகின்றனர்.

இந்த பக்தர்கள் வசதிக்காக, சபரிமலையில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை நேரங்களில் மட்டும் தபால் சேவை செய்வதற்காக பிரத்யேகமாக, தபால்துறை ஒரு தற்காலிக தபால்நிலையத்தை கடந்த 1960-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

இந்த தபால்நிலையம் ஆண்டிற்கு ஒரு முறை மண்டல பூஜை தொடங்கி மரகவிளக்கு பூஜை வரை மட்டுமே செயல்படுகிறது. தற்போது மண்டல பூஜையை முன்னிட்டு இந்த தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியிருக்கிறது.

ஜனவரி 16ம் தேதி வரை இந்த தபால்நிலையம் செயல்படும். இந்த தபால் நிலையம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தவிர அனைத்து நாட்களிலும் செயல்பட தொடங்கியுள்ளது.

அடர்ந்த வனங்கள் நிறைந்த மலைப்பகுதியில் இந்த கோவில் அமைந்தள்ளதால் பக்தர்கள் வரும் சீசன் நேரத்தில் மட்டுமே இங்கு தற்காலிக தபால் நிலையம் செயல்படுகிறது .

மணியார்டர் சேவை, மின் மணியார்டர் சேவை, அனைத்து மாநில மொபைல்களுக்கு ரிசார்ஜ் வசதி, ஸ்பீடு வசதி, பதிவுத்தபால் மற்றும் மை ஸ்டாம்ப் உள்ளிட்ட பல்வேறு தபால் சேவைகள் இந்த தபால்நிலையத்தில் உள்ளன.

இந்த தபால்நிலையத்தில் பக்தர்கள் போடும் தபால்களுக்கு 18 படிகளுடன் ஐய்யப்பன் விக்ரகத்தை கொண்ட சிறப்பு தபால் முத்திரையிட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது இந்த தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியதால் நாடு முழுவதும் இருந்து வேண்டுதல் தபால்கள், அழைப்பிதழ்கள் உள்ளிட்டவை சபரிமலை ஐய்யப்பனுக்கு தினமும் குவிகிறது என்று சபரிமலை தற்காலிக தபால்நிலைய அதிகாரி பி.ஜி.வேணு தெரிவித்தார்.

இவரை தவிர்த்து இந்த தபால்நிலையத்தில் 2 ஊழியர்கள் பணிபுரிகறார்கள். ஒருவர் அலுவலகப் பணி மற்றும் தபால்கள் பட்டுவாடா செய்கிறார். மற்றொருவர், கீழே பம்பாவில் இருந்து சபரிமலைக்கு வரும் தபால்களை எடுத்து வரச் செல்கிறார். பம்பாவில் இருந்து சபரிமலைக்கு வாகனங்கள் வர முடியாது என்பதால் காட்டுப்பகுதிவழியாக இந்த ஊழியர்கள் நடந்து சென்றே தினமும் தபால்களை எடுத்து வருகிறார். இந்த காரணத்திற்காகவே நிரந்தரமாக இங்கு தபால்நிலைம் தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

நிரந்தர தபால்நிலையம் தொடங்கப்படுமா?

ஒய்வு பெற்ற தேசிய விருது பெற்ற முன்னாள் ஊழியர் கோவை நா.ஹரிஹரன் கூறுகையில், “சபரிமலையில் தேவஸ்தானம், வனத்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் நிரந்தரமாக தபால்சேவை இல்லாமல் தவிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கீழே பம்பாவிலும் தற்காலிக தபால் நிலையம் மட்டுமே இருந்தது. பம்பாவில்,1974-ஆம் ஆண்டு ஜன., 19-ஆம் தேதி தற்காலிக தபால்நிலையம் தொடங்கப்பட்டது. அதன் கிளை தபால் அதிகாரியாக வாசுதேவன் நாயர் பொறுப்பேற்றார்.

பின்னர் 13.4.1981-ஆம் ஆண்டு அது நிரந்தர கிளை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், சபரிமலையில் தற்போது வரை நிரந்தர தபால் நிலையம் தொடங்கவில்லை. தற்காலிக தபால்நிலையங்கள் செயல்படாத காலங்களில் பம்பாவிலிருந்து தான் சபரிமலைக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதனால், நிரந்ரதமாக சபரிமலையில் தபால்நிலையம் அமைக்க வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x