Published : 29 Nov 2021 04:54 PM
Last Updated : 29 Nov 2021 04:54 PM

கோவில்பட்டி அருகே விபத்து; உயிரைப் பொருட்படுத்தாமல் உதவி: ஊர்க்காவல்படை ஓய்வுபெற்ற கமாண்டருக்குப் பாராட்டு

கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதியில் நடந்த விபத்தில் உதவிய ஊர்க்காவல்படை ஓய்வுபெற்ற கமாண்டர் கண்ணன், அவரது மனைவி கலைவாணி ஆகியோருக்கு டி.எஸ்.பி. உதயசூரியன் நினைவுப் பரிசு வழங்கினார்.

கோவில்பட்டி அருகே விபத்து நடந்த இடத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் உதவிய ஊர்க்காவல்படை ஓய்வுபெற்ற கமாண்டர் மற்றும் அவரது மனைவியை டி.எஸ்.பி. உதயசூரியன் பாராட்டினார்.

கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதியில் கடந்த 26-ம் தேதி அதிகாலை திருநெல்வேலி சென்ற கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த கோபால் (40), முருகன் (54) ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஹரி (40), ரகுநாதன் (39) ஆகியோர் காயமடைந்தனர். விபத்து அதிகாலை ஒரு மணி அளவில் நடந்துள்ளது. கோபால் உள்ளிட்டோர் வந்த கார் மின் கம்பத்தில் மோதியபோது, தீப்பொறிகளுடன் உயர் அழுத்த மின் வயர் அறுந்து நான்கு வழிச்சாலையில் விழுந்தது.

இதனைப் பின்னால் காரில் வந்த ஊர்க்காவல் படை ஓய்வுபெற்ற கமாண்டர் கண்ணன் (67), அவரது மனைவி கலைவாணி (63) ஆகியோர் கவனித்தனர். வயர் அறுந்து கிடப்பதால் இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அதில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதனால், உடனடியாகத் தனது காரை சாலையின் குறுக்கே நிறுத்திய கண்ணன், தனது மனைவியை எதிர் திசையில் வரும் வாகனங்களை அறுந்த வயருக்கு முன்பாக நிறுத்த அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். மேலும், போலீஸ், தீயணைப்பு மற்றும் மின்சாரத்துறைக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு சுமார் 15 நிமிடங்களில் வந்தனர். அதுவரை கணவனும், மனைவியும், மழை பெய்து கொண்டிருந்த இருளில் நின்று வாகனங்களை அறுந்த மின்வயர் மீது மோதாமல் நிறுத்தினர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீஸார் வந்து துரித நடவடிக்கை எடுத்து மின்சாரத்தைத் துண்டித்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போக்குவரத்தைச் சரி செய்தனர்.

மழை பெய்து கொண்டிருந்த இருளில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது, வாகனங்களை நிறுத்தி உதவிய ஊர்க்காவல் படை ஓய்வுபெற்ற கமாண்டர் கண்ணன், அவரது மனைவி கலைவாணி ஆகியோரை நேற்று கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் நேரில் வரவழைத்துப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். மேலும், கண்ணன், அவரது மனைவி கலைவாணியின் சேவை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x