Published : 29 Nov 2021 04:21 PM
Last Updated : 29 Nov 2021 04:21 PM
விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடம் சரியும் அபாயத்தில் உள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாகக் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ள நீர் செல்கிறது.
அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கோமுகி மற்றும் மணிமுக்தா அணை நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த 3 தினங்களாகப் பெய்த இடைவிடாத மழையால் மணிமுக்தா அணைக்கு 2,579 கன அடி நீர்வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளது.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 2,579 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துச் செல்வதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 20 நாட்களாக ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 19-ம் தேதி அதிக தண்ணீர் சென்ற நிலையில், அதன் பிறகு தண்ணீர் குறைந்த அளவு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாகப் பெய்த தொடர்மழையால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால், ஆற்றின் மேற்குப் பகுதியில் பாலத்தை ஒட்டிய கரையை ஆக்கிரமித்து சிலர் கட்டிடம் கட்டியுள்ளனர்.
இந்தக் கட்டிடங்கள் கடந்த வெள்ளப்பெருக்கின்போதே சேதமடைந்தது. இந்த நிலையில் தற்போது கட்டிடம் மேலும் சேதமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் ஆற்றில் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து அக்கட்டிடத்தில் வசித்தவர்களை விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார், அவர்களை வேறு இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT