Published : 29 Nov 2021 04:13 PM
Last Updated : 29 Nov 2021 04:13 PM
புதுச்சேரியில் தனது தொகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பைப் பார்வையிடக் கோரி போராட்டம் நடத்திய சுயேச்சை எம்எல்ஏ, ஆட்சியரைக் கையோடு அழைத்துச் சென்றார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் இதன் தாக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, உப்பனாற்றை ஒட்டியுள்ள உருளையன்பேட்டையில் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளை ஆட்சியர் பூர்வாகார்க் பார்வையிடவில்லை எனத் தெரிகிறது.
இதனால் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு தன் ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இன்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அலுவலகத்துக்கு வந்த ஆட்சியரை அலுவலகத்தினுள் அனுமதிக்காமல் முற்றுகையிட்ட எம்எல்ஏ, தங்கள் பகுதியை ஏன் பார்வையிட வரவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, எம்எல்ஏவுடன் புறப்பட்ட ஆட்சியர் பூர்வாகார்க், உருளையன்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான புதுநகர், குபேர் நகர், அந்தோணியார்கோவில் வீதி, பாரதிபுரம், காமராஜர் சாலை ஆகிய இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஆட்சியரிடம் பேசிய மக்கள், அடிக்கடி வெள்ள நீர் வீடுகளில் புகுந்து பொருட்கள் சேதம் அடைவதாகவும், மழையால் பாதிக்கப்பட்ட எங்களுக்குக் குடிநீர், உணவு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
அதையடுத்து மக்களுக்குத் தேவையான உதவிகள், உணவு, குடிநீர் உடனடியாக வழங்குவதுடன் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் பூர்வாகார்க் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT