Published : 29 Nov 2021 03:11 PM
Last Updated : 29 Nov 2021 03:11 PM
தமிழக அரசின் நெகிழி ஒழிப்பு முயற்சிக்கு சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழக அரசு சுற்றுச்சூழல் அக்கறையுடன் நெகிழியைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கான அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
நெகிழிக் கட்டுப்பாட்டில் நெகிழிக் குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடுவதும் அதே நேரத்தில் மக்களுக்கு நெகிழி மற்றும் அதன் மாற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும் மிக அவசியம். இவை இரண்டும் தமிழக அரசின் அரசாணையில் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நிறுவனங்களைத் தம் குப்பைகளுக்குப் பொறுப்பாக்கும் "நீடித்த உற்பத்தியாளர் பொறுப்பு" குறித்தும், மீண்டும் மஞ்சப்பை என்கிற இயக்கத்தைப் பற்றியும் அரசாணை பிறப்பித்தது பொருத்தமான நடவடிக்கையாகும். மரபான இயற்கை சார்ந்த தீர்வை நோக்கி நகர்வதாக அரசாணை மேலும் குறிப்பிட்டு இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தும் நெகிழிப் பொட்டலங்கள் போன்றவை தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் பெருநிறுவனங்களின் நொறுக்குத் தீனிப் பொட்டலங்கள் போன்றவை இந்த அரசாணையில் தவிர்க்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. நெகிழி ஒழிப்பில் மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியை மறுசுழற்சி செய்வதும் மற்றவற்றைத் தடைசெய்வதுமே ‘நெகிழிக் கழிவில்லா தமிழகத்தை’ உருவாக்கும்.
நெகிழியை எரித்து அழிக்கும் சாம்பலாக்கிகள் மற்றும் பைராலிசிஸ் நிலையங்களை அமைப்பது மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும். எனவே இத்திட்டங்களையும் முதற்கட்டத்திலேயே மக்களின் உடல்நலன் மற்றும் சூழல் நலன் அடிப்படையில் உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT