Published : 29 Nov 2021 12:01 PM
Last Updated : 29 Nov 2021 12:01 PM
பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி முதல் நேரில் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்து, மழை நீரைப் போர்க்கால அடிப்படையில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை வலியிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பருவ மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடைக்குத் தயாராகி இருந்த பல நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல் பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு பெற்றுத்தர வேண்டும். நெற்பயிர் பாதிப்புகளை தமிழக அரசு உடனடியாகக் கணக்கிட வேண்டும். டெல்டா விவசாயிகளின் துயரங்களைப் போக்க திமுக அரசு முன்வர வேண்டும்.
அதிமுக அரசு நேர்மையான முறையில் ஆட்சி செய்தது, ஜனநாயக முறையில் செயல்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்கவில்லை. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேதா இல்லம் தொடர்பாகக் கட்சியினரிடம் ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT