Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM
தன்னலத்தை மட்டுமே கருதாது, பொதுநலத்தையும் உலக நன்மை சிந்தனையையும் இந்து சமயம் பயிற்றுவிக்கிறது என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இந்து எண்டவ்மென்ட்ஸ் போர்டு,இந்து சென்டர், தி சிங்கப்பூர் தட்சிணபாரத பிராமண சபா ஆகிய தனியார் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இந்து சமயத்தில் பிறப்பும் சிறப்பும்’ என்ற இணையவழி தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் ‘ஆன்மிகமும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்து சமயத்தின் பிறப்பு குறித்துஆராய்ந்து பார்த்தால், பிரம்மதேவர் தனது சிருஷ்டியைத் தொடங்கிய காலத்திலேயே இந்த சனாதன தர்மம் தொடங்கியிருக்க வேண்டும். பிற்காலத்தில் அதற்கு ஒரு பெயர் தேவைப்பட்டதால் ‘இந்து சமயம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்து சமயம் வாழ்வியல் முறைகளைப் பயிற்றுவிக்கிறது. இந்து சமயத்தைக் கடைப்பிடிப்பதால், நாம் உலகத்துக்கே நன்மை செய்பவர்களாக மாற முடியும்.
யோகம், அப்யாசம், சத்சங்கம், நல்ல சுற்றத்தார் ஆகியவற்றின் மூலமே மனதைக் கட்டுப்படுத்தவும், செம்மைப்படுத்தவும் முடியும். தன்னலம் கருதாது பிறர் நலன் கருதுவது, உலக நன்மையைக் கருதுவதான எண்ணங்களை விதைப்பதுதான் இந்து சமயம்.
‘தெய்வம் மானுஷ ரூபேண’ என்ற வாக்குக்கு ஏற்ப, பாரத தேசத்தில், தெய்வங்கள் பல்வேறு அவதாரங்கள் எடுத்துள்ளனர். முனிவர்கள், ரிஷிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், ஞானிகள் அவதரித்து பல்வேறு பாசுரங்கள், இலக்கியங்கள், புராணங்கள், ஸ்லோகங்கள், உபதேசங்களை அருளியுள்ளனர்.
இந்து சமயம் ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற நோக்கில், தன்னலம் கருதாமல், வளர்ச்சியின் பங்கு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற பொதுநலச் சிந்தனையைத் தூண்டுகிறது.
இதன்மூலம் இந்து சமயம் தீர்க்க தரிசனத்துடன் நியாய தர்மங்களை உணர்த்துகிறது. இந்து சமயத்தின் நோக்கம் பரந்தது. எதிர்மறையானவை அல்ல.
ஸ்தல மரம், நதிகள் என்றுஅனைத்தையும் தேவதைகளாக நினைப்பது இந்து சமயத்தில் மட்டுமே. ஆலய வழிபாடு, அணைகள் கட்டுவது, நீர் மேலாண்மையைப் பயிற்றுவிப்பது, கோயிலில் வலம்வருவது (நடைபயிற்சி), சோலார்எனர்ஜி (சூரிய நமஸ்காரம்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று அகத்தூய்மை மட்டுமின்றி, புறத்தூய்மையையும் பயிற்றுவிப்பது இந்து சமயம்.
உலகப் பார்வையிலும் இந்துசமயத்தின் கோட்பாடுகள் போற்றப்படுகின்றன. மன்னர்களும் இந்து சமயத்தைக் கடைப்பிடித்து, வைத்திய சாலைகள், அன்ன சத்திரம்,கல்விக் கூடங்கள் அமைத்து சனாதன தர்மத்தைப் பாதுகாத்துள்ளனர்.
‘அன்பே சிவம்’ என்பதற்கு ஏற்ப ஒருவரோடு ஒருவர் அன்பாகப் பழகுவதை கற்பிப்பது இந்து சமயம். பண்பாடு, கலாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாப்பது இந்து சமயம்.
அறம், பொருள், இன்பம், வீடுஆகியவற்றை உணர்ந்து கொண்டால் இம்மை, மறுமை வினைகளை எளிதாகக் கடக்கலாம். பொருள், பட்டம் முதலானவற்றை ஈட்டினாலும், நற்சிந்தனைகள், புண்ணியத்தையும் ஈட்ட வேண்டும். இயற்கையைப் போற்ற வேண்டும். ஆயுர்வேதம், கர்னாடக சங்கீதம், ஜோதிடம் போன்ற விஷயங்களும் இந்து சமயத்தில் உள்ளன.
தர்மத்தை வளர்ப்பது, சமுதாய சிந்தனையைக் கொண்டுள்ளது இந்து சமயம். இந்து சமயத்தைப் புரிந்துகொள்ள அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். கோயில்கள், புண்ணிய தீர்த்தங்கள், நீர்நிலைகள், ஸ்தல மரங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுக்காக்க வேண்டும்.
ஆத்மார்த்த பூஜை (இல்லங்களில் நடைபெறும் பூஜை), பரார்த்த பூஜை (கோயில்களில் நடைபெறும் யாகங்கள், ஹோமங்கள்) ஆகியவற்றை உணர்த்துவது இந்து சமயம்.
இந்து சமய நூல்கள், தலங்கள், கலாச்சாரம், பண்பாடு, தர்மங்கள், நீதி உபதேசங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பகுதி நேர பாடசாலைகளைத் தொடங்க வேண்டும். இந்து சமயக் கல்வியை நாம் அனைத்து இடங்களிலும் உருவாக்க வேண்டும்.
அதற்கு இந்து செண்டர், இந்துஎண்டவ்மெண்ட்ஸ் போர்டு போன்றஅமைப்புகள், சுற்றுலாக்கள், கலந்துரையாடல், கருத்தரங்குகள், நாமசங்கீர்த்தனம், பாரம்பரியங்களை விளக்கும் சொற்பொழிவுகள் மூலம் உதவ வேண்டும். இணையவழி மூலமும் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என்பதற்கு ஏற்ப நாமும் வளம்பெற்று, உலகத்துக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். ஆண், பெண் பேதமின்றி முக்கியத்துவம் அளிப்பது இந்து சமயம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
முன்னதாக, இந்து எண்டவ்மென்ட்ஸ் போர்ட்டைச் சேர்ந்த ராஜசேகர், இந்து சென்டரைச் சேர்ந்த கிருஷ்ண சதாசிவம் ஆகியோர், பல வருடங்களாக நிகழ்த்திவரும் இந்து சமயம் தொடர்பான நிகழ்ச்சிகள், ஆன்மிகப் பணிகள், கோயில் வைபவங்களை விஜயேந்திரர் பாராட்டிப் பேசினார். இந்த சொற்பொழிவை https://youtu.be/-uu5nHJ4G2w என்ற யுடியூப் லிங்க்-ஐ பயன்படுத்திக் கேட்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT