Published : 12 Mar 2016 03:22 PM
Last Updated : 12 Mar 2016 03:22 PM

தேர்தலில் போட்டியிட நடப்பு எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?- விருப்ப மனு அளித்துவிட்டு காத்திருப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இப்போது மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமைக்கு விருப்ப மனு கொடுத்துவிட்டுக் காத்திருக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி தொகுதிகள் அதிமுக வசமும், கிள்ளியூர் தொகுதி தமாகா வசமும், பத்மநாபபுரம் தொகுதி திமுக வசமும், குளச்சல், விளவங்கோடு தொகுதிகள் காங்கிரஸ் கட்சி வசமும் உள்ளன. தாங்கள் வெற்றிபெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதே சமயத்தில், இத்தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவதற்கான காய் நகர்த்தலை தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் தொடங்கியுள்ளனர்.

நாஞ்சில் முருகேசன்

கடந்த தேர்தலின்போது நாஞ்சில் முருகேசன் சொந்த பணத்தில் மும்மத விழாக்களுக்கு வழங்கிய நிதியும், தமிழகம் முழுவதும் வீசிய திமுக எதிர்ப்பு அலையும் நாகர்கோவிலில் இவரது வெற்றிக்கு அடித்தளமிட்டது.

எம்எல்ஏவான பின் சொந்த பணத்தில் நிதி வழங்குவதைத் தவிர்த்துவிட்டார். பெயர் சொல்லும்படியான வளர்ச்சிப் பணிகள் எதுவும் தொகுதிக்குள் மேற்கொள்ளப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர் மீது பெண் ஒருவர் நில மோசடி புகார் கொடுக்க, தலைமை வரை விவகாரம் போய் கட்சிப் பதவியை இழந்தார்.

மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பலவற்றை சட்டத்துக்கு புறம்பாக வீட்டுமனைகளாக மாற்றியது உள்ளிட்ட பல விவகாரங்களில் பொதுமக்களிடையே இவர் அதிருப்தியை சம்பாதித்துள்ளார். இதுகுறித்து அதிமுகவினர் கட்சித் தலைமைக்கு அறிக்கை அனுப்பியுள்ளனராம். இருந்தும் தொகுதி முழுவதும் கோயில்களுக்கு கொடுத்த நிதி, வாக்குகளாக மாறும் என கணக்குப் போட்டு காத்திருக்கிறார் முருகேசன்.

பச்சைமால்

கடந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சர் பதவியைக் கைப்பற்றி னார் பச்சைமால். மாவட்ட அதிமுக அலுவலகத்தையே இவரது உறவினர் ஒருவர் பூட்டியது, இரட்டைக் கொலை வழக்கில் இவரது உதவியாளர் சிக்கியது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அமைச்சர் பதவிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொண்டார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பதவியை இழந்தார். கட்சிக்குள் முக்கியத்துவத்தையும் இழந்தார். இப்போது கன்னியாகுமரி தொகுதிக்கு மீண்டும் போட்டியிட விண்ணப்பித்திருந்தாலும், குளச்சல் தொகுதியையாவது பெற்று விட வேண்டும் என காத்திருக்கிறார்.

புஷ்பலீலா ஆல்பன்

பத்மநாபபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புஷ்பலீலா ஆல்பன். தொகுதிக்குள் பெரிதாக நல்ல பெயரோ, கெட்ட பெயரோ இல்லை. எனினும் அதைப் பொருட்படுத்தாது இத் தொகுதியில் மீண்டும் போட்டியிட புஷ்பலீலா ஆல்பன் தீவிர முயற்சியில் உள்ளார்.

தக்கவைக்குமா தமாகா?

கிள்ளியூர் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமாகா தொடங்கப்பட்டதும், அக்கட்சியில் இணைந்தார். இவர் தமாகா சார்பில் இத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். சிட்டிங் எம்எல்ஏ என்பதால் இவர் மீண்டும் போட்டியிடுவதற்கு தடையேதும் இருக்காது என்கின்றனர் தமாகாவினர்.

குளச்சல், விளவங்கோடு

குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் அதிக கேள்வி கேட்டவர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரத்தில் விருப்ப மனு நேர்காணலை நடத்த கட்சித் தலைமை இவரை நியமித்திருந்தது. இதனால் இவர் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது பிரின்ஸ், விளவங்கோடு தொகுதியை கேட்டு வருகிறார். அங்கு சிட்டிங் எம்எல்ஏவாக விஜயதரணி உள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் செல்வாக்கு பெற்றுள்ள விஜயதரணி, அண்மையில்தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், விளவங்கோடு தொகுதி அவருக்கே கிடைக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிட்டிங் எம்எல்ஏக்களில் யார், யாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x