Last Updated : 11 Mar, 2016 04:54 PM

 

Published : 11 Mar 2016 04:54 PM
Last Updated : 11 Mar 2016 04:54 PM

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் அதிமுகவினர் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் அதிமுகவினர் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது.

‘பிளசன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டபோது, தமிழகமெங்கும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, தருமபுரியில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ்ஸுக்கு அவர்கள் தீவைத்தனர். இதில் பஸ்ஸில் பயணம் செய்த கோகிலவாணி (நாமக்கல்), காயத்ரி (விருத்தாசலம்), ஹேமலதா (சென்னை) ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். பஸ்ஸில் பயணம் செய்த மற்ற 44 மாணவிகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு தண்டனையை உறுதி செய்தது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, மூவரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், சுஷில்குமார் ஆகியோர் கூறியதாவது:

கட்சித் தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதும் மனமுடைந்த தொண்டர்கள் விரக்தி காரணமாக வன்முறையில் ஈடுபட்டனர். மாணவிகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் பஸ்ஸுக்கு தீவைக்கவில்லை. இச்சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை அல்ல. கூட்டத்தினருடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நேரத்தில் நடந்த தற்செயலான சம்பவமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் நோக்கம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில், அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்பது மட்டுமே. வேளாண் பல்கலைக்கழகம் அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அந்த பஸ்ஸுக்கு தீவைப்பதன் மூலம் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.

எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகள் பற்றிய எந்த விவரமும் குற்றவாளிகளுக்கு தெரியாது. வன்முறையின்போது சுற்றி என்ன நடக்கிறது என்பதே அறியாத நிலையில் நடந்த தவறு. இன்னும் சொல்லப் போனால், இந்த வழக்கின் குற்றவாளிகள் மூவருமே கூட்டத்தினரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கருத வேண்டும். எனவே, தண்டனையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நேற்று தீர்ப்பளித் தது. ‘குறைந்த அளவில் பொறுப்புடையவர்கள்’ என்ற வாதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x