Published : 28 Nov 2021 06:14 PM
Last Updated : 28 Nov 2021 06:14 PM

இந்தியைத் திணிக்க முயன்றால் இந்தியா பல நாடுகளாக சிதறிவிடும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ எச்சரிக்கை 

இந்தியைத் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறி விடும். கூட்டு ஆட்சித் தத்துவத்தை ஒழிக்க முனைகின்ற அரசு, காணாமல் போய்விடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர், தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பிரகாலாத் ஜோஷி, பியுஷ் கோயல் முன்னிலை வகித்தனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுவரை காணாத அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை அவர்கள் இழந்து இருக்கின்றார்கள். காஷ்மீரில் இருநது கன்னியாகுமரி வரை மக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தனர்.

எனவே, இந்த மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெறும் என்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் உறுதி கூறினார். அதன்படி, நடைபெற இருக்கின்ற இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் முதுல் நாளே வர வேண்டிய மசோதா, பத்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கின்றது,

எம்.எஸ். சுவாமிநாதன் குழு கொடுத்த அறிக்கையின்படி, விளைபொருள்களுக்கு விலை உரிய விலையை, அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்தியா ஒரு கூட்டு ஆட்சி நாடு. ஆனால், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கின்றது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று, ஒரு சர்வாதிகார நாடு ஆக்கத் துணிந்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எரிமலையாக வெடித்தது. எனவே, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், இணையற்ற ஜனநாயகவாதி, ஜவகர்லால் நேரு, மக்கள் விரும்புகின்றவரை, இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என உறுதிமொழி கொடுத்தார்.

ஆனால், சில நாள்களுக்கு முன்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கு ஒரே மொழி இந்திதான்; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம் என்று, அதிகாரத் திமிரோடு கூறி இருக்கின்றார்.

அப்படித் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறி விடும் என எச்சரிக்கின்றேன். இந்த அக்கினிப் பரீட்சையில், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே ஒழிக்க முனைகின்ற இந்த அரசு, காணாமல் போய்விடும்.

இவ்வாறு வைகோ பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x